» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சின்ன முட்டம் முதல் திருவள்ளுவர் சிலை வரை பயணிகள் படகுகள் சேவை : பட்ஜெட்டில் அறிவிப்பு
சனி 15, மார்ச் 2025 8:49:26 AM (IST)
சின்ன முட்டம் துறைமுகத்தினை 2-வது முனையமாகக் கொண்டு திருவள்ளுவர் சிலை வரை பயணிகள் படகுகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி மற்றும் நாகூர் - வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திட ரூ.300 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த பணிகளை ஒருங்கிணைத்து முறையாக செயல்படுத்திட தனித்தனியே வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்க வேண்டிய நிலையில், முதல்கட்டமாக மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் நகரங்களுக்கு என அத்தகைய வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கப்படும். மேலும், அறியப்படாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டியின் மையப்பகுதியில் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா ரூ.70 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்திடும் பொருட்டு மாமல்லபுரம் - மரக்காணம் வரையிலான கடலோரச் சுற்றுலா வழித்தடம், திருச்சி - தஞ்சாவூர் - நாகை சோழர்கால சுற்றுலா வழித்தடம், மதுரை-சிவகங்கை மரபுசார் சுற்றுலா வழித்தடம், கோவை - பொள்ளாச்சி வரையிலான இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுற்றுலா வளர்ச்சிக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்த்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்பு திருமேனிகள் காட்சிக்கூடம் ரூ.40 கோடியில் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் ரூ.22 கோடியிலும், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியம் ரூ.21 கோடியிலும் உருவாக்கப்படும். மாமல்லபுரம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி இழைப் பாலத்தினை பார்வையிட நாடெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளதால், கூடுதலாக சின்ன முட்டம் துறைமுகத்தினை 2-வது முனையமாகக் கொண்டு திருவள்ளுவர் சிலை வரை பயணிகள் படகுகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அலையாத்தி காடுகள் பாதுகாப்பு, நவீன மீன்பிடி நடைமுறைகள் அறிமுகம் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையில், கடல் வள அறக்கட்டளை ஒன்று ரூ.50 கோடி தொடக்க நிதியுடன் உருவாக்கப்படும்.
சென்னை திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புதுப்பட்டு, கடலூர் மாவட்ம் சாமியார் பேட்டை ஆகிய 6 கடற்கரைகள் ‘நீலக்கொடி' சான்று பெற்றிட ரூ.24 கோடி மதிப்பீட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநில போக்குவரத்து கழகங்களின் 700 டீசல் பஸ்களை, இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களாக மறுசீரமைப்பு செய்திட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியை கொண்டு ரூ.70 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வேட்டை பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாத்திடவும், உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு ஒன்று ரூ.1 கோடி நிதியில் உருவாக்கப்படும்.
புலம் பெயர்ந்த ஈரநிலப் பறவைகளுக்கான வலசைப் பாதையாக விளங்கி, பல்லுயிர் சமநிலையை பாதுகாக்கும் வகையில், தனுஷ்கோடி பகுதியை பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் பகுதியில், 1,000 ஹெக்டர் பரப்பளவில் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை ஊக்குவிக்க கூடிய ஒரு பல்லுயிர் பூங்கா நிறுவப்படும். இதற்காக, முதல்கட்டமாக ரூ.10 கோடி நிதி வழங்கப்படும். 2025-26-ம் ஆண்டு 500 கிலோ மீட்டர் நீளமுள்ள வனப் பகுதி சாலைகள் பல்வேறு திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து ரூ.250 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
