» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மளிகை கடை வியாபாரி எரித்துக் கொலை: நாகர்கோவிலில் பயங்கரம்!

சனி 8, மார்ச் 2025 10:53:18 AM (IST)



நாகர்கோவிலில் மொபட்டில் வந்த மளிகை கடை வியாபாரியை எரித்துக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

குமரி மாவட்டம், நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு அருகே வடலிவிளை அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அதன் அருகாமை யில் உள்ள பாண்டியன் சாலையில் மொபட்டுடன் வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதுபற்றி அவர்கள் கோட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உதவி கண்காணிப்பாளர் லலித்குமார் மற்றும் தனிப்படை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் எரிந்த நிலையில் கிடந்த மொபட்டையும், பிணமாக கிடந்தவரையும் மீட்டு விசாரணை நடத்தி னர். அப்போது பிணமாக கிடந்தவர் தலையில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது. எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு, பின்னர் மண்எண்ணெய் ஊற்றி எரித்திருக்கலாம் என போலீசார் கருதினர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். எரிந்த நிலையில் கிடந்த மொபட்டில் இருந்த ஆர்.சி. புத்தகத்தை எடுத்து பார்த்த போது, அதில் நாகர் கோவில் வைத்தியநாதபுரம் வடலிவிளையை சேர்ந்த வேல் என்ற முகவரி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் வேல் (42) என்பது தெரிய வந்தது. பாரதிநகர் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்த அவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

தினமும் காலை வீட்டில் இருந்து மொபட்டில் கடைக்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு பிறகு வீட்டுக்கு திரும்புவார். அதே போல் நேற்றும் வழக்கம் போல் கடைக்கு சென்ற அவர், இரவில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்ல வில்லை.

இந்த நிலையில் தான் பாண்டியன் வீதி பகுதியில் வேல் பிணமாக கிடந்தது இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டது. நள்ளிர வில் மொபட்டில் வீட்டுக்கு சென்ற அவரை மர்ம கும்பல் வழிமறித்து தாக்கி கொலை செய்து விட்டு, பின்னர் உடலை தீவைத்து எரித்திருக்கலாம் என தெரிகிறது.

அவரை கொைல செய்த வர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வேலுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த பிரச்சினையில் வேல் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

வேலுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது தலையில் காங்கிரீட் கல்லால் தாக்கியது போல் தெரிகிறது. இது பற்றி பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும். கொலை செய்யப்பட்ட வேலுவுக்கு திருமணமாகா ததால் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு சகோதரனும், சகோதரியும் உள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மளிகைக்கடை வியாபாரி மொபட்டுடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory