» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 5, மார்ச் 2025 5:47:09 PM (IST)

சென்னை எழும்பூர் - புதுடில்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் தலைநகருக்கு வேலைவாய்பிற்காகவும், மேற்படிப்பிற்காக வும், நுழைவுதேர்வு, நேர்காணல் மத்திய அரசு சம்பந்தமான அலுவலகங்கள் போன்றவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் டெல்லி நோக்கி பயணிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் விசா சம்மந்தமான வெளிநாட்டு தூதரக பணிகளுக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் டெல்லி செல்கின்றனர்.
இது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் இருந்து வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வருவதற்கு நியுடெல்லி வந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்கு போதிய தினசரி ரயில் வசதி இல்லை. வடஇந்தியாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் யாத்ரீகர்களுக்கு தென்தமிழ்நாட்டில் இருந்து டெல்லி ஆக்ரா போன்ற பகுதிகளுக்கு வட இந்திய சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு தினசரி ரயில் வசதி இல்லை. டில்லியிலிருந்து தமிழகத்திற்கு தற்போது இயக்கப்படும் ரயில்களில் தென்மாவட்ட மக்களுக்கு எந்தவிதமான பலனும் இல்லை என்ற குறை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
தமிழகத்திற்கு, டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. ஆனால், இவை அனைத்தும் சென்னையோடு நின்றுவிடுகின்றன. சென்னையைத் தாண்டி தான் மாநிலத்தின் பெரும் பகுதியே உள்ளது. இந்த ரயில்கள் தமிழ்நாட்டுற்குற்குள் மொத்தம் 60 கி.மீ., தூரம் மட்டுமே வருகின்றன. மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள சென்னைக்கு ரயில்களை இயக்கி, ஒட்டுமொத்த மாநிலத்திற்கு ரயில்களை இயக்குவதாக காட்டப்படுகிறது. சென்னை வரை மட்டுமே இயக்கப்படும் இந்த ரயில்களினால், மாநிலத்தின் பெரும்பான்மை மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலை எடுத்து கொண்டால் சென்னைக்கு அடுத்த நிறுத்தம் விஜயவாடா இது ஆந்திர மாநிலத்தில் உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் நிலைமை இப்படி இல்லை. டெல்லி போன்ற வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் கர்நாடகா முழுவதும், ஆந்திர முழுவதும் கேரளா முழுவதும் இயக்கப்படுகின்றன.
டெல்லியில் இருந்து இயக்கப்படும் எந்த ரயில்களாக இருந்தாலும் அவை அனைத்தும் அந்த மாநிலங்கள் முழுமைக்குமாக பயன்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் அத்தனையும் சென்னையோடு நின்றுவிடுகின்றன. திருக்குறள் எக்ஸ்பிரஸ், வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த திருக்குறள் ரயில் மட்டும்தான் கன்னியாகுமரி வரை செல்கிறது. தவிர, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், வாரத்தில் இரண்டு தினங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையுடன் நின்று விடுகிறது.
இந்த திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கை ஆகும், இந்த கோரிக்கை இதுவரையிலும் நிறைவேற்றபடவில்லை. பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகள், காலஅட்டவணை அமைத்தல், ரயில்கள் பராமரிப்பு, கூடுதல் ரயில் பெட்டிகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற காரணத்தால் ரயில்வேதுறை இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே சார்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஒருசில நேரங்களில் நடவடிக்கை எடுத்தாலும் வேறு ரயில்வே மண்டலங்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குவது இல்லை.
இரட்டைபாதை: தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை உள்ள இருப்பு பாதை இரட்டை பாதையாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் முனைய விரிவாக்க பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இதுதான் தக்க சமயம் சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒருசில ரயில்களை இரட்டைபாதை உள்ள பாதை வழியாக மதுரை, திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
இதற்கு முதலில் சென்னை எழும்பூரிலிருந்து புதுடெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க இயக்க வேண்டும். இவ்வாறு இந்த ரயிலை நீட்டிப்பு செய்து இயக்கும் போது இந்த ரயிலின் முதன்மை பராமரிப்பு சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு மாற்றம் செய்யும் போது சென்னையில் உள்ள பராமரிப்பு பிட்லைன் காலி இடம் ஏற்படும். இந்த காலி இடத்தில் சென்னையிலிருந்து வேறு புதிய ரயில்களை அறிவித்து இயக்கி சென்னையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். இது சென்னை வாழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சென்னைக்கு கூடுதல் ரயில் சேவை: இந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னை எழும்பூர் வழியாக இயங்குவதால் தென் மாவட்ட பயணிகளுக்கு நமது மாநிலத்தின் தலைநகர் சென்னைக்கு செல்ல தினசரி பகல் நேர ரயில் வசதி கிடைக்கும். இது தென் மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
காலஅட்டவணை: கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5:45 மணிக்கு புறப்படுகிறது. இந்த கால அட்டவணை மாற்றம் செய்யாமல் நீட்டிப்பு செய்யும் போது மாலை 4:45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படுமாறு அமையும். இதைப்போல் மறுமார்க்கமாக மாலை புதுடெல்லி இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு காலை 5:00 மணிக்கு தற்போது வந்து சேர்கிறது.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 5:00 மணிக்கு நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் புறப்படும் இந்த ரயில் சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் படியாக கால அட்டவணை அமைந்து கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்யும் போது மாலை 6:00 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்து சேருமாறு அமையும். இந்த கால அட்டவணையில் தற்போது இந்த மார்க்கத்தில் எந்த ஒரு ரயிலும் இயக்கப்படவில்லை என்பதால் எந்த ஒரு ரயிலுக்கும் கால அட்டவணையை எளிதாக எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நீட்டிப்பு செய்ய முடியும். என சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
