» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை அனைவரும் நேசிக்க வேண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா

திங்கள் 3, மார்ச் 2025 3:30:05 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை அனைவரும் நேசிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள் விடுத்தார்.

உலக வனவிலங்கு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை மற்றும் கன்னியாகுமரி நாசர் பவுண்டேஷன் இணைந்து வடசேரி மாவட்ட வன அலுவலகத்தில் நடத்திய மாபெரும் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு மாணவ மாணவியர்களிடையே பேசுகையில்-

மார்ச் 3 ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படும் உலக வனவிலங்கு தினம், நமது பூமியில் உள்ள நம்பமுடியாத பன்முகத்தன்மையை மதிக்கவும், அதை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் நாம் ஒன்றிணையும் நேரமாகும். கன்னியாகுமரி மாவட்டமானது இயற்கை எழிலைக்கொண்ட மாவட்டமாகும். வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற இயற்கை வளங்களை காண முடியாது. 

நமது மாவட்டத்தில் கடற்கரைகள், மலைகள், காடுகள், அருவிகள், வயல்வெளிகள், உள்ளடக்கிய பசுமை மாவட்டமாகும். அந்த இயற்கை வளங்களையும், அங்குள்ள மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்தையும் நாம்தான் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகளில் தண்ணீர் எங்கிருந்து வருகிறது நாம் அனைவருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு நீருற்றுகள் நிறைந்த மாவட்டம் நமது கன்னியாகுமரி மாவட்டமாகும்.

மேலும் பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செலுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். ஆனால் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமாக இயற்கை வளத்துடன் கூடிய சுற்றுலாத்தளங்கள் உள்ளன. குறிப்பாக அரியவகை மருத்துவகுணம் கொண்ட மூலிகைகள், பழவகைகள், விலங்குகள், அரியவகை பறவைகள், விதவிதமான செடி வகைகள் உள்ளிட்டவைகள் நிறைந்த மாவட்டம். இந்த இயற்கை வளங்களை அனைவரும் நேசிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்.

இதனைத்தொடர்ந்து உலக வனவிலங்கு நாள் நிகழ்வினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். மேலும் ஊசி தட்டான்கள் விளக்க கையடினையும் வெளியிட்டார்கள். முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா. கன்னியாகுமரி வனத்துறை மற்றும் கன்னியாகுமரி நாசர் பவுண்டேஷன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட வனவிலங்கு புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார். 

இக்கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 50 க்கும் மேற்பட்ட திறமையான வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் எடுத்த மலை இருவாச்சி, ஓநாய் சிலந்தி, அகலவாயன், பச்சோந்தி, மரத்தவளை, காட்டு மாடு, செந்தலைக்கிளி, மலபால் கரப்பு வெள்ளை இருவாயன், கருவேல் பபூல் நீலன், கதிர்குருவி, சிறியபொன்முதுகு, மரங்கொத்தி, மாங்குயில், தேவாங்கு, கூனல்மூக்கு சட்டித்தலையன், நீலகிரி பந்தி, தேன்சிட்டு, தண்ணீர் பாம்பு, நீலச்சிட்டு, வளைந்த அலக சிலம்பன், பழனிச்சிரிப்பான், நீலமயில் அழகன், புல் அந்துப்பூச்சி, வேட்டைக்கார ஆந்தை, மலையான், விரால் அடிப்பான், ஊர்ப்பருந்து, பெரிய ராசாளி, செந்தலை பஞ்சுருட்டான், மரகதபுறா, வயல் நெட்டைக்காலி, பெரிய பச்சைக்கிளி, காட்டுப்பாசி, செம்பருந்து, பழுப்பு தலை குக்குறுவான், பெரிய இருவாயன், மஞ்சள் வாலாட்டி, பருத்த அலக மீன்கொத்தி, பெரிய பூ நாரை, சைபீரிய புதர் சிட்டு, குருசர், கொண்டைபாம்புக்கழுகு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிர்ச்சியூட்டும் படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் உதவி வனப் பாதுகாவலர் ஸ்ரீ வல்சன், பிரதாப் பயிற்சி), அனைத்து வன சரர்கள், கன்னியாகுமரி நாசர் பவுண்டேஷன் வினோத் சதாசிவம், வன அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory