» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விதிகளை மீறும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை : ஆட்சியர் ஆர்.அழகுமீனா எச்சரிக்கை!
சனி 1, பிப்ரவரி 2025 4:08:44 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நேரம் மற்றும் வேகத்தை மீறி பயணிக்கும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு, வானக உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று நடைப்பெற்ற சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் கனிம வாகனங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டும், கனிம வளம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுடன் கனிம வாகனங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டும், கனிம வளம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கனிமங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை மற்றும் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செல்ல அனுமதியில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சாலைகள் குறுகிய இருவழி சாலைகளாக உள்ளதால் கனிமங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் 40 கி.மீ வேகத்திற்கு மிகாமல் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி வேகத்தை விட அதிவேகமாக இயக்கும் மற்றும் மதுபோதையில் விபத்துக்களை ஏற்படுத்தும் ஓட்டுநர் மீதும், வாகனத்தின் உரிமையாளர் மீதும் உயிரிழப்பு விபத்து ஏற்படும் நிகழ்வில் மோட்டார் வாகனச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் சுரங்கம் மற்றும் கனிமம் (முறைப்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி) சட்டத்தின் படி வாகனங்களை கைப்பற்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வாகனத்தின்அனுமதி ரத்து செய்யப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் அமைந்துள்ள இடத்தை கனிமம் கொண்டு செல்லும் இடமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து அனுமதிச் சீட்டில் பூர்த்தி செய்து முறைகேடாக கேரள மாநிலத்திற்கு கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் சுரங்கம் மற்றும் கனிமம் (முறைப்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி) சட்டத்தின் படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கனிமவளத்துறையால் வழங்கப்படும் அனுமதி சீட்டில் அனுமதிக்கப்பட்ட கனிம அளவை விட அதிகமாக ஏற்றிச் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் (வுயரசரள எநாiஉடந) மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் சுரங்கம் மற்றும் கனிமம் (முறைப்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி) சட்டத்தின் படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் 16 சக்கரங்கள், அதற்கு மேற்பட்ட சக்கரங்களை கொண்ட கனரக வாகனங்கள் சாலையில் செல்லும் போது அனைத்து சக்கரங்களையும் பயன்படுத்த வேண்டும்.
மேலும் காவல்துறை, வருவாய்துறை, கனிமவளத்துறை, போக்குவரத்து துறை, வணிக வரித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கேரள மாநிலத்திற்கு செல்லும் வாகனங்களை தொடர் சோதனை மற்றும் கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.