» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உலகப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தொல்லியல் களப்பயணம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
சனி 30, நவம்பர் 2024 11:19:32 AM (IST)
உலகப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தொல்லியல் துறை மற்றும் சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து நடத்தும் மதுரை மற்றும் கீழடிக்கு ஒரு நாள் தொல்லியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (30.11.2024), உலகப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தொல்லியல் துறை மற்றும் சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து நடத்தும் மதுரை மற்றும் கீழடிக்கு ஒரு நாள் தொல்லியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்கள் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட ஆறு நினைவுச் சின்னங்களில் இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் தொல்லிடங்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை அழைத்துச் சென்று மரபுச் சின்னங்கள், பாரம்பரிய தளங்கள் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை மற்றும் சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டுவரும் தொல்லியல் மன்றத்திலுள்ள பொறுப்பாசிரியர்களில் விருப்பமுள்ள 150 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான ஒருநாள் தொல்லியல் களப்பயணமாக மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மீனாட்சி அம்மன் திருக்கோவில், கலைஞர் நூற்றாண்டு நூலகம், கீழடி அகழாய்வுத்தளம் மற்றும் கீழடி அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு சென்று உலக மரபுச்சின்னங்களையும், தமிழர்களின் தொன்மைகளையும் கண்டுகளித்து பயன்பெறவுள்ளனர்.
மதுரை தொல்லியல் அலுவலர் தீ ஆனந்தி, மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன், கீழடி அகழாய்வுப் பொறுப்பாளர் பா.ஆசைத்தம்பி ஆகியோர் களப்பயணத்தில் ஆசிரியர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் தொல்லியல்துறை அலுவலர்கள் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
P.RAJESH SELVARATHI -ARCHAEOLOGICAL ENTHUSIASTNov 30, 2024 - 05:58:56 PM | Posted IP 172.7*****