» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வீடியோ, ரீல்ஸ் இருந்தால் அளிக்கலாம் : ஆட்சியர் வேண்டுகோள்!
சனி 16, நவம்பர் 2024 3:11:19 PM (IST)
கடந்த 2000ம் ஆண்டு கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை திறப்பு விழா குறித்த வீடியோ காட்சி, திரைசுருள் (ரீல்ஸ்) மற்றும் தரவுகள் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்- கன்னியாகுமரியில் வான்புகழ் கொண்ட அய்யன் திருவள்ளுவருக்கு வானளாவிய சிலையினை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 01.01.2000-ம் ஆண்டில் திறப்பு விழா காணப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு (வெள்ளி விழா) வருகின்ற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01, 2025 ஆகிய இரண்டு தினங்களில் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அய்யன் திருவள்ளுவர் அவர்களின் வெள்ளி விழா ஆண்டினை சிறப்பாக நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1990ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 10 வருட காலம் பல்வேறு இடர்பாடுகளை தாண்டி 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி வெகு விமரிசையாக திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.
1990 முதல் 1999ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் பொதுமக்கள், ஒளிப்பதிவளார்கள் மற்றும் புகைப்படக்கலைஞர்களால் எடுக்கப்பட்ட அனைத்து தரவுகளையும் குறிப்பாக வீடியோ காட்சி தரவுகள், புகைப்படங்கள், இருப்பின் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் 9498042430 என்ற அலைபேசி எண், [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் 9488725580 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தரவுகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.