» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜார்க்கண்ட் பெண்ணின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டு!
வெள்ளி 8, நவம்பர் 2024 5:55:46 PM (IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவருக்கு உடனடி அறுவை சிச்சை மேற்கொண்டு உயிரை காப்பாற்றிய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவக்குழுவினருக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்கைக்காக வந்த ஜார்க்கண்ட மாநிலத்தை சார்ந்த மஞ்சு அவர்களுக்கு உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது அவர்கள் நலமாக உள்ளார்கள் என்பதை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.ராமலெட்சுமி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவிக்கையில்- ஜார்கண்ட் மாநிலம் பங்கம்பாரா பகுதியை சார்ந்த மகி மால்டு, அவருடைய மனைவி மஞ்சு மற்றும் அவர்களுடைய 3 குழந்தைகளுடன் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோணம் எறும்புக்காடு கம்பி பாலம் பகுதியில் வசித்து வருகின்றனர். மஞ்சு கடந்த 06.11.2024 அன்று கடுமையான வயிற்று வலியினால் இரத்தப்போக்கு ஏற்பட்டு, அவதிப்பட்ட வந்த நிலையில் அருகாமையில் உள்ள கோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அம்மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளியை பரிசோதித்து, ஸ்கேன் எடுத்துக்கொண்டு வரும்படி அறிவுறுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் அவர்கள் ஸ்கேன் எடுத்துக்கொண்டு, மருத்துவரை அணுகிய போது, ஸ்கேன் ரிப்போட்டில் மஞ்சு 8 வாரம் கர்ப்பிணியாக உள்ளதாகவும், அவரது கர்ப்பம் இயல்புக்கு மாறாக கர்ப்பக்குழாயில் கர்ப்பம் தரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் குழாய் விரிந்து, வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, மேற்சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில் மகி மால்டு, மஞ்சு, அவரது சகோதாரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் கடந்த 07.11.2024 அன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தனது ரிப்போட்டினை மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை மேற்கொள்ள முற்பட்டனர். ரிப்போட்டினை பார்வையிட்ட மருத்துவர் மஞ்சுவின் நோயின் தீவிரத்தன்மை குறித்து விரிவாக எடுத்துக்கூறி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். ஆனால் மஞ்சு, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்காமல், மாறாக தங்களுக்கு எந்த சிகிச்சையும் வேண்டாம். நாங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு செல்கிறோம். எங்களை அனுப்பி விடுங்கள் என வாக்குவாதம் செய்தார்கள்.
ஆனால் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் எவ்வளவு கூறியும் அவர்கள் அறுவை சிகிச்கை மேற்கொள்ள சம்மதிக்காததால், மருத்துவர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துமனை முதல்வர் மரு.ராமலெட்சுமி அவர்களிடம் நோயாளியின் நோயின் தீவிரத்தன்மையை எடுத்து கூறியதோடு, இந்நிலையில் நோயாளியை வெளியே அனுப்பினலோ, பயணம் மேற்கொண்டாலோ அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நோயாளிக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். முதல்வர் அவர்களும் நோயாளி மற்றும் அவரது உறவினரிடம் எடுத்துக்கூறியும், தகுந்த மனநல ஆலோசனைகள் வழங்கியும், மருத்துவமணை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் நோயாளியிடமும் அவரது கணவர் மற்றும் உறவினரிடமும் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவர்கள் புரிந்து கொள்ளமால் அறுவை சிகிச்சை செய்ய ஒத்துழைக்கவில்லை. எனவே முதல்வர் அவர்கள் காலம் தாழ்த்தினால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து நேரிடுவது உறுதி என்பதை உணர்ந்து உடனடியாக என்னிடம் (மாவட்ட ஆட்சித்தலைவர்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்து விவரங்களையும் தெரிவித்தார்கள்.
நான் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, காவல் துறையினர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, நோயாளியிடமும் அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் நோயின் தீவிரத்தினை எடுத்துக்கூறி அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தும்படி கூறினேன். ஆயினும் அவர்கள் அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்கவில்லை. நானும் தொடர்ந்து நோயாளியின் உடல்நிலை குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து வந்தேன்.
பின்னர் நான் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடமும், தேசிய சுகாதார இயக்க அலுவலர், சுகாதார செயலாளர் ஆகியோரிடம் கலந்தாலோசனை மேற்கொண்டு, நேரடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, நோயாளியிடமும் அவரது கணவர் மற்றும் உறவினரிடம் பேசி அறுவை சிகிச்சை மேற்கொள்ள எழுத்துபூர்வமாக சம்மதம் வாங்கி அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் அவர்களுக்கு அறிவுறுத்தினேன். அதனடிப்படையில் உடனடியாக நோயாளிக்கு அறுவை சிகிச்சை மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டு, தற்போது மஞ்சு நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மேலும் அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்புகளையும் உரிய முறையில் செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு நிகரான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதோடு, அனைத்து விதமான நோய் கண்டறிதலுக்கான கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள். மேலும் புலம்பெயர்ந்த ஜார்க்கண்ட மாநிலத்தை சார்ந்த மஞ்சுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவரின் உயிரை காப்பாற்றிய கல்லூரி முதல்வர், மருத்துவமனை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், மகப்பேறு சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட மருத்துவக்குழுவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இங்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவும் இயங்கி வருகிறது. ஏற்கனவே சிறப்பான சேவைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு Agshya சான்றிதழ் பெற்றிருக்கிறது. இரத்த வங்கி, தாய்ப்பால் வங்கி உள்ளிட்டவையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துமனைக்கு சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொண்டு அரசின் திட்டங்கள் வாயிலாக பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்தார்கள்.
ஜார்க்கண்ட மாநிலத்தை சார்ந்த மஞ்சு அவர்களுக்கு உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிரை காப்பாற்றிய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ராமலெட்சுமி, மருத்துவர்கள் மரு.கிங்ஸ்லின் ஜெபசிங், மரு.ஜோசப் சென், மரு.சுந்தரவாணி, மரு.டெல்பின், மரு.விஜயலெட்சுமி, மரு.ரெனிமோள் மற்றும் மருத்துவக்குழுவினருக்கு மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இது குறித்து மஞ்சு அவர்களின் கணவர் மகி மால்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உடனடி நடவடிக்கையால் என்னுடைய மனைவிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது நலமுடன் இருக்கிறார். என் மனைவியின் உயிரை காப்பாற்ற உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், கல்லூரி முதல்வர், மருத்துவக்குழுவினர் அனைவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.