» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வாளி தண்ணீரில் மூழ்கி 3 வயது பெண் குழந்தை பலி: ராஜாக்கமங்கலம் அருகே சோகம்
திங்கள் 11, நவம்பர் 2024 8:02:42 PM (IST)
ராஜாக்கமங்கலம் அருகே வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவை மதியழகன் நகர் பகுதியை சேர்ந்தவர் தவசி (வயது 22). இவருடைய மனைவி கண்ணாத்தாள் (21). இவர்களுக்கு 3 வயதில் நிரஞ்சனா, 1½ வயதில் தர்ஷினி என்ற 2 மகள்கள் உண்டு. தவசி தற்போது குடும்பத்துடன் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் தெக்குறிச்சி பகுதியில் உள்ள அம்பேத்கர் காலனியில் வசித்து வருகிறார்.
தவசியின் தங்கை விஜயலட்சுமி மதுரையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் விஜயலட்சுமியை பார்ப்பதற்காக கண்ணாத்தாள் தனது 2-வது மகள் தர்ஷினி, தவசியின் தாயார் மணியம்மா, மற்றொரு தங்கை பஞ்சவர்ணம் ஆகியோருடன் நேற்று முன்தினம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் தவசி மற்றும் மூத்த மகள் நிரஞ்சனா ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
மாலையில் தவசி வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மகள் நிரஞ்சனாவை காணவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர் மகளை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது வீட்டின் காம்பவுண்டுக்குள் இருந்த குளியலறைக்கு சென்று பார்த்தபோது நிரஞ்சனா வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி தலைகுப்புற கிடந்துள்ளார். இதனை பார்த்ததும் துடிதுடித்து போன தவசி உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், நிரஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ராஜாக்கமங்கலம் போலீசார் நிரஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாளி தண்ணீரில் மூழ்கி 3 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.