» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுரை – புனலூர் ரயிலை நாகப்பட்டினம் வரை நீட்டிப்பு செய்து இயக்க கோரிக்கை
வெள்ளி 8, நவம்பர் 2024 4:40:29 PM (IST)
இலங்கைக்கு பயணிகள் கப்பலில் செல்ல வசதியாக மதுரை – புனலூர் ரயிலை நாகப்பட்டினம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பலை இயக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது.
முதலில் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக இயக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை தற்போது சனிக்கிழமை உட்பட்ட 5 நாட்களாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது இலங்கை நாடு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஈர்த்து வருகிறது. இதில் அதிகமாக மக்கள் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய மாவட்ட பகுதிகளில் உள்ள பயணிகள் நாகப்பட்டினம் சென்றுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கு சிவகங்கை பயணிகள் கப்பலில் பயணம் செய்ய அதிக அளவில் விரும்புகின்றனர்.
இதைப்போல் இலங்கையில் உள்ள சுற்றுலா மற்றும் ஆன்மீக பக்தர்கள் தென்மாவட்டங்களில் பகுதிகளில் உள்ள ஆன்மீக கோவில்களுக்கு குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் போன்ற கோவில்களுக்கு அதிக அளவில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.
இவ்வாறு இலங்கையில் உள்ள மக்கள் பயணிகள் கப்பலில் பயணம் செய்துவிட்டு நாகப்பட்டினம் வந்து இறங்கி விட்டு அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு ரயிலில் பயணம் செய்ய தற்போது நேரடியாக எந்த ஒரு ரயில் சேவையும் இல்லை. இதைப்போல் மறு மார்க்கமாகவும் தென்மாவட்ட மக்கள் அதிக அளவில் இலங்கைக்கு சுற்றுலா நிமித்தம் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்ய நாகப்பட்டிணம் செல்வதற்கு எந்த ஒரு நேரடி தினசரி ரயில் சேவையும் இல்லை. இதனால் இரண்டு மார்க்கங்களில் உள்ள பயணிகள் மிகவும் பாதிப்படைகிறார்கள்.
பயணிகளுக்கு இந்தச் சேவையை மலிவு விலையில் குறைந்த கட்டணத்தில் வழங்குவதற்காக, இந்திய அரசு நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுகள் ஈடுகட்ட, ஒரு வருட காலத்திற்கு, மாதத்திற்கு 250 லட்சங்கள் ரூபாய்க்கு மேல் நிதி உதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோன்று, பயணிகள் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு தற்போது விதிக்கப்படும் வரியையும் இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்கான இந்திய அரசாங்கம் 63.65 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு மானிய உதவியாக வழங்கியுள்ளது. இந்திய அரசு இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது அதற்கான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
இதற்காக சிவகங்கை பயணிகள் கப்பல் பயணிகள் செல்வதற்கு வசதியாக அதிகாலை நாகப்பட்டினம் செல்லத்தக்க வகையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கினால் மட்டுமே இந்திய அரசு அதிக அளவில் நிதி உதவி அளித்து வரும் இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமையும்.
எனவே தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் வழியாக தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை – புனலூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலை திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருச்சி கோட்டத்தில் திருச்சி மற்றும் விழுப்புரம் என்று இரண்டு ரயில் நிலையத்தில் மட்டும் பராமரிப்பு வசதி உள்ளது. இந்த ரயிலை இவ்வாறு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்றால் பராமரிப்பு செய்வதில் சிக்கல் உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது இந்த பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிப்பு வசதி இல்லாத காரணத்தால் இந்த ரயிலை வாரத்திற்கு மூன்று நாட்கள் நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீட்டிப்பு செய்து விட்டு மீதமுள்ள நான்கு நாட்கள் திருச்சி வரை நீட்டிப்பு செய்து திருச்சியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது மட்டுமல்லாமல் காரைக்கால் - திருநள்ளாறு – பேரளம் இருப்பு பாதை பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றது இந்த ரயிலை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் வழியாக மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம் என்று தெரிவித்தார்.
இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காலை 8:00 மணிக்கு புறப்படுகிறது. இதைப்போல் மறுமார்க்கமாக இலங்கையிலிருந்து மதியம் புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வந்து சேர்கிறது. இந்த கால அட்டவணையை பார்த்து இந்த மதுரை – புனலூர் ரயிலை நீட்டிப்பு செய்து கால அட்டவணை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.