» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வளர்ச்சி திட்டப்பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

புதன் 4, செப்டம்பர் 2024 11:55:33 AM (IST)



ஊரக உள்ளாட்சி துறையின் சார்பில் நடைபெறும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலேசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அலுவலர்களிடையே தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்ட மலைவாழ் பகுதிகளில் சாலை வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட முன்னுரிமை அளிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். 

நமக்கு நாமே திட்டம் முதலமைச்சரின் முக்கியமான திட்டமாகும். நிலுவையில் உள்ள பழைய பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து புதிய பணிகளை தொடங்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பகுதிகளில் ரூ.12 இலட்சம் மதிப்பில் 5 சோலார் விளக்கு அமைத்திட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல், தோவாளை பகுதியில் அமைந்துள்ள ரோகினி பொறியில் கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பரிந்துரைந்துள்ள 12 பணிகளை விரைந்து செயல்படுத்தி, மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் பணிகளில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அப்பகுதி அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விவரங்களை தெரிவிப்பதால் சென்னைக்கு செல்லும் போது உரிய அலுவலர்களை சந்தித்து, அது குறித்து பேசி நிவர்த்தி செய்திட முடியும். ஒப்பந்தாரருக்கு பணி வழங்கியும், பணிகளை தொடங்க காலதாமதம் ஏற்பட்டால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தாரருக்கு குற்ற பத்திரிக்கை கொடுத்து, பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் கட்டுபாட்டில் உள்ள பணிகள் நடைபெறமால் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் ஒப்பந்தாரர்கள், பொறியாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, ஒப்பந்ததாரருக்கு அவருடைய தன்குறிப்புகளோடு, நோட்டீஸ் வழங்கி ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளமால் தடை செய்ய வேண்டும். மேலும் தாமதிக்கப்பட்ட பணிகளை துரித நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பள்ளி சுற்றுச்சுவர், நியாயவிலைக்கடைகள், அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் செயல் அலுவலர்கள், காவலர்கள், தோட்டக்கார்கள், தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள். அதனை அனைத்து துறைகளும் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கீழ் அமைப்பில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் உயர் அலுவலர்கள் வரை வாரந்தோறும் ஊரக பகுதிகளுக்கு சென்று களஆய்வு நடத்த வேண்டும். தங்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நீர்நிலைகளில் குப்பைகள் இருப்பதை கண்டால் முதல் நடவடிக்கையாக அப்பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கனள தொடர்பு கொண்டு உடனடியாக குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு முதன்மை தலைமை செயலாளர் காணொளி காட்சி வாயிலாக கல்வி நிறுவனங்களில் பாலின துன்புறுத்தலை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், கல்லூரி முதல்வர்கள், துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள். அனைத்து துறை அரசு அலுவலங்களிலும், ஒரு பெண் உறுப்பினரை கொண்ட குழுவினை ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்கள். 

அதன்படி இன்றைய தினம் இக்கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி முகமையின் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்களிலும், ஒரு பெண் உறுப்பினர் தலைமையில் ஒரு குழுவினை ஏற்படுத்திட வேண்டும். மேலும் இக்குழு மற்றும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அறிவிப்பு பலகையில் தெரிவிப்பதோடு, இலவச எண் 181 என்ற ஒட்டுவில்லைகள் ஒட்ட வேண்டும். அதன் அருகாமையில் ஒரு புகார் பெட்டியினை வைக்க வேண்டும். 

இப்புகார் பெட்டியில் பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, புகார் தெரிவிக்கப்பட்ட நபர் மீது முதல் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அனைத்து அலுவலகத்திலும் பாலின துன்புறுத்தலுக்கு எதிரான குழுவினை ஏற்படுத்துவதோடு, புகார் பெட்டிகளை வைப்பதோடு, குழந்தைகள், மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கும் இது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாந்தி, உதவி இயக்குநர்கள் சாந்தி (ஊராட்சிகள்), சிவபாலன் (தணிக்கை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி திட்ட அலுவலர் சக்திஅனுபாமா, ஊரக வளர்சி திட்ட முகமை செயற்பொறியாளர் ஹசன் இப்பராஹிம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட கண்காணிப்பாளர் புஷ்பலதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளார்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory