» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டப் பேரவை உறுதிமொழிக்குழு குழு ஆய்வு!

வியாழன் 11, செப்டம்பர் 2025 5:37:45 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை த.வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு குழுவின் தலைவர் தி.வேல்முருகன், தலைமையில் இன்று வருகை தந்தனர். தொடர்ந்து குழுவின் தலைவர் தி.வேல்முருகன் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்- தமிழ்நாட்டை சார்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வாழ்கின்ற கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற முக்கியமான இடம் கன்னியாகுமரி. 

முக்கடல் சந்திக்கின்ற இந்த பகுதியில் ஏற்கனவே விவேகானந்தர் பாறை அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதனைத்தொடர்ந்து முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அயராத முயற்சியால் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் பயனாக ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு அளவில் தமிழறிஞர்கள், பொதுமக்கள் அய்யன் திருவள்ளுவர் சிலையினை பார்த்து செல்கின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் அய்யன் திருவள்ளுவர் சிலையை எளிதாக சென்று பார்ப்பதற்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து வரப்பட்டதை கருத்தில்கொண்டு, நான் 2001, 2006 மற்றும் 2007-இல் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்குழுவின் தலைவராக இருக்கிற போது மூத்த பத்திரிக்கையாளர் முன்னிலையில் இதற்கான ஒரு ஆலோசனையை முதன் முதலில் தமிழ்நாடு அரசுக்கு வழங்கி இருந்தேன். 

தற்போது அந்த பரிந்துரைக்கு உயிர் கொடுக்கப்பட்டு இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியில் பிரம்மாண்டமாக அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையினை இணைத்து ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழைபாலம் கட்டப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு இதுவரைக்கும் சுமார் 17 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவே அய்யன் திருவள்ளுவருக்கு பெருமை சேர்ப்பதேயாகும்.

இச்சூழ்நிலையில் பாலத்தின் மேற்பகுதியில் வர்ணம்பூசும்பணி நடைபெற்று வருகிறது.‌ அந்த தருணத்தில் கனமான சுத்தியல் மேலிருந்து விழுந்த காரணத்தினால் கண்ணாடியின் சிறுப்பகுதி சேதமடைந்தது. இச்செய்தி, பத்திரிக்கை ஊடகங்களில் வெளியானவுடன் மாவட்ட ஆட்சியர் முறையாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கும், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று, உடனடியாக சேதமடைந்த அந்த கண்ணாடி மாற்றப்பட்டுள்ளது. மேலும் சுமார் 600 பேர் கூட ஒரே நேரத்தில் நின்று கண்ணாடி பாலத்தினையும் கடலினையும் அய்யன் திருவள்ளுவரையும் காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவானது மூன்றாவது முறையாக இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்ந கண்ணாடி பாலம் மிகவும் உறுதித்தன்மையுடன் இருப்பதாக பொறியியல் வல்லுநர்கள் சான்றளித்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மேலும் காலையிலிருந்து சுற்றுலா பயணிகள் கண்ணாடி இழை பாலத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு வருகின்றனர். எனினும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. மேற்படி இந்த குழுவின் பரிந்துரையினை ஏற்று பாலம் அமைத்து தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகுகள் நேரடியாக அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு சென்று வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் உள்ளிட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். மேலும் இக்கோரிக்கையினை ஏற்று பூம்புகார் போக்குவரத்து கழகம், நெடுஞ்சாலைத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட மூன்று துறைகளும் இணைந்து நேரடியாக திருவள்ளுவர் சிலையினை வந்து பார்ப்பதற்கு ஏதுவான வசதி வாய்ப்புகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று, இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைந்துள்ள பெரியநாயகி கடற்கரை கிராமத்தில் 1835 மீனவ மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சுமார் 235 இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் மற்றும் 6 நாட்டு படகுகளும் இயக்கப்படுகிறது. இந்த கடற்கரை கிராமத்தில் உள்ள மீனவர்கள் முக்கியமாக மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்கின்றனர். மீனவர்களின் படகுகள் சேதமடைந்து அவை கரைசேர்வது கடினமாக இருந்து வருகிறது எனவே இச்சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, அவசரத் தேவையையும் உணர்ந்த பெரியநாயகி தெருவில் தூண்டில் வளைவு நீட்டிக்கும் பணிக்காக ரூ.2600.00 இலட்சத்துக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு, அதன்படி IIT Madras (Department of Ocean Engineering) மூலமாக தூண்டில் வளைவு நீடிக்கும் பணி 235 மீட்டரிலும், வலை பின்னும் கூடமும் அமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் புத்தேரியில் நான்கு வழி சாலை திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் சாலை அமைத்தல் பணிகள் ரூ.141 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது. தற்போது 56 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளது. 2026 ஏப்ரலில் இப்பணிகள் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவகல்லூரி மருத்துவமனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இம்மருத்துவமனையானது 2007ம் ஆண்டு 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையும், 2009-2010 கல்வியாண்டிலிருந்து மாணவர் சேர்க்கையும் நடைபெற்று இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்குட்பட்ட பல்வேறு மாவட்டங்களிருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் சராசரியாக 350-400 வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

இங்கு பக்கவாதம், முடக்கு வாதம், ஆறாத நாள்பட்ட புண்கள், மூலம், பௌத்திரம், மூத்திரக்கல், தோல் நோய்கள், இளம் பிள்ளை வாதம், ஆட்டிசம், வளர்ச்சி குறைப்பாடு உட்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த சிகிட்சை வழங்கப்படுகிறது. தேவை அடிப்படையில் கூடுதலாக 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து கன்னியாகுமரி (ஆசாரிப்பள்ளம்) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை மையம் கட்டப்பட்டு அனைத்து உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளது. இருப்பில் வைத்துள்ள உபகரணங்களை அனைத்தையும் பொருத்தி சிகிச்சை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது இயற்கையோடு இணைந்த மருத்துவமனையாக உள்ளது. இங்கு மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிட மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குவதற்காக கூடுதலாக இருக்கை வசதிகளை ஏற்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனைக்கு 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை தருகிறார்கள். எனவே பொதுமக்களின் கோரிக்கையான எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனையின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் த.வேல்முருகன் தெரிவித்தார்கள்.

ஆய்வில் குழு உறுப்பினர்கள் இரா.அருள் (சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்), சா.மாங்குடி (காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), எம்.கே.மோகன் (அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு துணை செயலாளர் ஸ்ரீ.ரா.ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினயக்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி,நெடுஞ்சாலை துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கிளாரான்ஸ் டேவி, இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.சகாயஸ்டீபன் ராஜ், துணை இயக்குனர்கள் மரு.ரவிக்குமார் (குடும்ப நலப்பணிகள்), சின்ன குப்பன் (மீன்வளத்துறை), மாவட்ட பொது சுகாதார மருத்துவ அலுவலர் அரவிந்த் ஜோதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் பாரதி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், வட்டாட்சியர் கந்தசாமி (அகஸ்தீஸ்வரம்), தனிவட்டாட்சியர் (தேசிய நெடுஞ்சாலை) ராஜேஷ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory