» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு

செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)



அமெரிக்காவில் வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான புதிய நடைமுறை வருகிற டிசம்பர் 26-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

அதாவது வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.  இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 26-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த புதிய விதியின் கீழ், அமெரிக்காவிற்கு வரும் போது அல்லது வெளியேறும்போது அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களிடம் இருந்து புகைப்படங்கள் மற்றும் பிற பயோமெட்ரிக் தகவல்களை சேகரிப்பார்கள். முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு துறை ஒவ்வொரு பயணியுடனும் இணைக்கப்பட்ட புகைப்பட தரவுத்தளங்களை தொகுத்து, பாஸ்போர்ட்டுகள், பயண ஆவணங்கள் மற்றும் எல்லை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை இணைக்கும். இந்த படங்கள் பின்னர் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் எடுக்கப்பட்ட நிகழ்நேர புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டு சரி பார்க்கப்படும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் போது போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்பவர்களை எளிதில் தடுக்க முடியும். அதேபோல, இந்த நடவடிக்கையின் மூலம் எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory