» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய பொருட்களுக்கு ஏப்ரல் 2‍ முதல் கூடுதல் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் அறிவிப்பு

வியாழன் 6, மார்ச் 2025 8:49:12 AM (IST)

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என தெரிவித்தார்.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி பதவியேற்றார். அப்போது முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் அவர் சர்வதேச நாடுகளை அலறவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவில் வரி வசூலிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையின் கீழ் இந்திய பொருட்களுக்கு அதிகளவு வரி விதிக்கப்படும் எனவும் கூறி வந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றியபோது டிரம்ப் இதனை தெரிவித்தார். இதுப்பற்றி அவர் கூறியதாவது:-

அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். அமெரிக்காவின் உத்வேகம், பெருமை, நம்பிக்கை மற்றும் உற்சாகம் திரும்பி உள்ளது. அமெரிக்கா திரும்பி வந்துவிட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மற்றவர்கள் செய்ததை விட 43 நாட்களில் நாங்கள் அதிகமாக சாதித்துள்ளோம்.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நீங்கள் உங்களின் பொருள்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்யவில்லையென்றால், அந்த பொருள்களுக்காக நீங்கள் ஒரு வரியை செலுத்தவேண்டியது இருக்கும். சில நேரங்களில் அது மிகப்பெரியதாக இருக்கும். பிற நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு எதிராக வரிவிதித்து வருகின்றன. இப்போது நாம் அதை அவர்களுக்கு திருப்பி செய்யும் நேரம் இது.

பூமியில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டாலும் நாம் பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகிறோம். இனிமேல் அது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், நாம் அவற்றுக்கு வரி விதிப்போம். அது பரஸ்பரம்.

அந்த வகையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும். அவர்கள் நம்மை அவர்களின் சந்தைகளில் இருந்து விலக்கி வைக்க பணமற்ற கட்டணங்களை செயல்படுத்தினால், நமது சந்தைகளில் இருந்து அவர்களை தள்ளி வைக்க பணமற்ற தடைகளை நாமும் உருவாக்குவோம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

கூச்சலிட்ட எம்.பி. வெளியேற்றம்

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தபோது அவையில் இருந்த அவரது ஆதரவாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். முன்னதாக டிரம்ப் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஜனநாயக கட்சி எம்.பி.யான அல் கிரீன், டிரம்பின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார். இதனையடுத்து சபாநாயகர் ஜான்சன் அவரை அவையில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். அதன் பின்னரும் தொடர்ந்து கூச்சலிட்ட அல் கிரீனை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.

இதனிடையே தனது உரையின்போது உக்ரைன் போர் குறித்து பேசிய டிரம்ப், அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உக்ரைனில் நிலவும் காட்டுமிராண்டித்தனமான மோதலை முடிவுக்கு கொண்டுவர நான் அயராது உழைத்து வருகிறேன். ஜெலன்ஸ்கியிடம் இருந்து ஒரு முக்கியமான கடிதம் எனக்கு கிடைத்தது. அதில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கும், கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் உக்ரைன் தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி எழுதியுள்ளார்” என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory