» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா அதிக வரி விதித்தால் நாங்களும் பதிலடி கொடுப்போம் : டிரம்ப் மிரட்டல்!
புதன் 18, டிசம்பர் 2024 11:31:38 AM (IST)
இந்தியா அதிக வரிகளை விதித்தால், நாங்களும் பதிலடியாக அதே அளவுக்கு வரிகளை விதிப்போம் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் "இந்தியாவின் வரி விதிப்பு நடைமுறைகளை கடுமையாக விமர்சித்து உள்ளார். சில அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியா இதுபோன்று அதிக வரிகளை விதித்தால், நாங்களும் பதிலடியாக அதே அளவுக்கு வரிகளை விதிக்கும் பழிக்கு பழி திட்ட அணுகுமுறையை கையிலெடுப்போம் என்றார்.
அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகளாக உள்ள சீனா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக உறவுகள் பற்றிய விரிவான உரையாடலின்போது, டிரம்ப் இதனை கூறியுள்ளார்.
இந்தியா நிறைய வரிகளை விதிக்கிறது. பிரேசிலும் அதிக வரி விதிக்கிறது. அவர்கள் அதிக வரிகளை விதிக்க விரும்புகிறார்கள் என்றால், அதன்படி செயல்படட்டும். ஆனால், நாங்களும் அதே அளவுக்கு வரி விதிப்போம். வர்த்தகத்தில் வெளிப்படை தன்மை என்பது தன்னுடைய பொருளாதார கொள்கையின் முக்கிய விசயம் என அவர் அழுத்தி கூறினார்.
இந்தியா மட்டுமின்றி சீனா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக விவகாரங்களை பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார். இதனால், அவருடைய அடுத்த அரசில், பொருளாதார கொள்கைகளின் முக்கிய விசயங்களில் ஒன்றாக கூடுதல் வரி விதிப்பது இருக்கும் என அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.
அமெரிக்க எல்லை பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத போதை பொருட்கள் கடத்தல், அகதிகள் புலம்பெயர்தல் உள்ளிட்ட விவகாரங்களில் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 25 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க அவர் திட்டமிட்டு உள்ளார்.