» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசியாவில் 44 ஆயிரம் சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு: அரசு முடிவு

செவ்வாய் 17, டிசம்பர் 2024 8:34:32 AM (IST)

இந்தோனேசியாவில் சிறையில் கூட்ட நெரிசலை குறைக்க  சுமார் 44 ஆயிரம் சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தோனேசியாவில் சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சட்ட விரோத செயல்களும் அதிகளவில் அரங்கேறுகின்றன. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்கின்றனர். 

அப்போது போதைப்பொருள் கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதேபோல் அரசாங்கத்தை விமர்சித்த குற்றத்துக்காகவும் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

எனவே சிறையில் கூட்ட நெரிசலை குறைக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி சிறையில் உள்ள 44 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது அந்த நாட்டின் மொத்த சிறை கைதிகளில் சுமார் 30 சதவீதம் ஆகும்.

இதற்காக சிறையில் உள்ள கைதிகளின் குற்ற விவரங்கள் மற்றும் பெயர்ப்பட்டியலை அரசாங்கம் சேகரித்து வருகிறது. இந்த பட்டியல் அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அவரது ஒப்புதல் பெற்று கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என மனித உரிமைகள் விவகாரத்துறை மந்திரி நடாலியஸ் பிகாய் கூறினார்.

மேலும் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மனநல ஆலோசனை வழங்கி அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory