» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சகோதரியின் வங்கிப் பணத்தை எடுக்க சடலத்துடன் வந்த நபர்: ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:24:52 PM (IST)

வங்கி நடைமுறைகள் மற்றும் அதிகாரிகளின் கறாரான அணுகுமுறையால் விரக்தியடைந்த பழங்குடியினத் தொழிலாளி ஒருவர், புதைக்கப்பட்ட தனது சகோதரியின் சடலத்தைத் தோண்டி எடுத்து வங்கிக்குத் தூக்கி வந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீது முண்டா (50). இவரது மூத்த சகோதரி கல்ரா முண்டா (56), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். கல்ரா தனது கால்நடைகளை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.20,000 தொகையைத் தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்தார்.

வறுமையில் வாடிய ஜீது முண்டா, தனது சகோதரியின் இறுதிச் சடங்குகள் மற்றும் குடும்பத் தேவைக்காக அந்தப் பணத்தை எடுக்க வங்கியை அணுகியுள்ளார். படிப்பறிவு இல்லாத ஜீது முண்டாவிடம், சகோதரியின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பணத்தைத் தர முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "சான்றிதழ் இல்லை என்றால், கணக்கு வைத்திருப்பவரை (சகோதரியை) நேரில் அழைத்து வாருங்கள்" என்று அதிகாரிகள் அலட்சியமாகக் கூறியதாகத் தெரிகிறது.

அதிகாரிகளின் பேச்சால் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ஜீது முண்டா, இரண்டு மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட தனது சகோதரியின் சடலத்தை மயானத்திலிருந்து தோண்டி எடுத்தார். அழுகிய நிலையிலிருந்த அந்தச் சடலத்தைத் தனது தோளில் சுமந்துகொண்டு நேராக வங்கிக்கு வந்து இறக்கி வைத்தார்.

வங்கி வாசலில் சடலத்தைப் பார்த்த வாடிக்கையாளர்களும் அதிகாரிகளும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஜீது முண்டாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது நிலையைப் புரிந்துகொண்ட போலீசார், வங்கியிடமிருந்து பணத்தைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னரே, அந்தச் சடலம் மீண்டும் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கியோன்ஜார் துணை ஆட்சியர் உமா சங்கர் தலாய் கூறுகையில்    "அந்த நபர் சட்ட விதிமுறைகள் தெரியாதவர். விரக்தியின் காரணமாகவே இதைச் செய்துள்ளார். அவர் நேரடி வாரிசு இல்லாததால் வங்கி ஆவணங்களைக் கேட்டது சட்டப்படி சரிதான். இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் அவருக்குத் தேவையான சான்றிதழ்களை விரைந்து வழங்கவும், வங்கிப் பணத்தைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றார்.

சடலத்தைத் தோளில் சுமந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஏழை மற்றும் படிப்பறிவற்ற மக்களிடம் வங்கி அதிகாரிகள் காட்டும் மனிதாபிமானமற்ற அணுகுமுறை குறித்துப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory