» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் யாத்திரையில் துயரம்: நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் பலி
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:50:27 AM (IST)

காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் வழித்தடத்தில் நிலச்சரிவில் சிக்கி இறந்த பக்தர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. புதைந்தவர்களை மீட்கும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. மற்ற இடங்களில் மழைக்கு மேலும் 7 பேர் இறந்தனர்.
காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி மச்சைல் மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலியாகினர். அங்கு மாயமான 32 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, நேற்று முன்தினம் வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் செல்லும் வழித்தடத்திலும் பாதயாத்திரை பக்தர்கள், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
காஷ்மீரின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில், ஜம்மு பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதில் ரியாசி மாவட்டத்தில், பிரபலமான வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் செல்லும் வழித்தடத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆத்குவாரியில் உள்ள இந்தர்பிரஸ்தா போஜ்னாலயா அருகே பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது நிலச்சரிவில் உருண்டு வந்த பாறைகள் மற்றும் மணல் விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமானவர்கள் புதையுண்டனர்.
உடனே மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு நிலச்சரிவு இடிபாடுகளை அப்புறப்படுத்தி பக்தர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தோண்டத் தோண்ட உடல்கள் வந்தவண்ணம் இருந்தன. நேற்று பகல் 11 மணிக்குப் பிறகு மழை சற்று ஓய்ந்திருந்ததால் மீட்பு பணிகள் வேகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று 32 பக்தர்கள் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 2 பேரும் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. காயங்களுடன் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். பலர் மண்ணில் புதைந்து இருக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் உயிர் பலி எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளது. அதனால் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஜம்முவில் 38 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கனமழையால் ஜீலம் மற்றும் தவி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சாலைகளில் அரிப்பு மற்றும் பாலங்களில் சேதம் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். மழைக்கு தோடா மாவட்டத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் தண்ணீர் புகுந்தது, அதைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி மற்றும் பிற ஊழியர்களை படகு மூலம் பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.
பிரதமர் இரங்கல்
விபத்து குறித்து பிரதமர் மோடி, எக்ஸ் வலைத்தளத்தில் இரங்கல் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் "மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் வருத்தமளிக்கிறது. துயரமடைந்த குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என்று கூறி இருந்தார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு நிர்வாகம் உதவி செய்து வருவதாக அவர் நேற்று கூறி உள்ளார்.
கனமழை பாதிப்புகளால், ஜம்மு மற்றும் கத்ரா ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால் 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 64 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ரெயில்சேவை தொடங்கியது. ஒரு நாள் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் சேவைகள் நேற்று ஜம்முவில் இருந்து மீண்டும் புறப்பட்டன. இதேபோல 22 மணி நேரமாக துண்டிக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்பு சேவைகளும் நேற்று மீண்டும் உயிர்பெற்றன.
காப்பாற்றிய அடுத்த நிமிடம் கட்டிடம் இடிந்தது
பஞ்சாபின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது, சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் மற்றும் பருவகால ஓடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த மழை காரணமாக, ஜம்மு காஷ்மீரின் லகான்பூரின் எல்லையில் உள்ள மாதோபூர் தலைமையகம் அருகே ரவி ஆற்றின் கரையில் நேற்று முன்தினம் பலர் சிக்கித் தவித்தனர். நேற்று கடும் மழைப்பொழிவு மற்றும் சவாலான சூழல் இருந்தபோதும், ராணுவ ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அவர்கள் மாதோபூர் கட்டிடத்தில் சிக்கித்தவித்த 25 பேரை மீட்டனர். அவர்களில் 22 பேர் சி.ஆர்.பி.எப். துணை ராணுவ வீரர்கள் ஆவர். மற்ற 3 பேர் பொதுமக்கள்.
அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. சவாலான சூழ்நிலையிலும், சரியான நேரத்தில் துல்லியமாக மீட்பு பணிகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:31:46 PM (IST)

கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:05:17 PM (IST)

எவ்வளவு நெருக்கடி வந்தாலும் விவசாயிகளை பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:00:03 AM (IST)

தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:38:50 PM (IST)

கர்ப்பிணி மனைவியை கொன்று துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவன்: நகரியில் பயங்கரம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:22:44 AM (IST)

விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் அனுமன் : அனுராக் தாக்குர் பேச்சு! கனிமொழி கண்டனம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 10:56:56 AM (IST)
