» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க புதிய மாற்றம்: இனி ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே!

வியாழன் 17, ஜூலை 2025 10:50:52 AM (IST)

ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி கடந்த 1ம் தேதி முதல், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் முதல் (ஜூலை 15-ம்தேதி) ஆதாருடன் ஓடிபி (OTP) அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ பிஆர்எஸ் (PRS) கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படுகிறது. ஓடிபி (OTP)யை உறுதிப்படுத்திய பின்பே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும். இது நேற்று முன் தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்தசூழலில் மேலும் சில திட்டங்களையும் இந்தியன் ரயில்வே பரிசீலித்து வருகிறது. குறிப்பாக ரயில் பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, முன்பதிவில்லா பெட்டிகளில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

74 ஆயிரம் ரயில் பெட்டிகள் மற்றும் 15 ஆயிரம் ரயில் என்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. என்ஜின்களில் பொருத்தப்படும் கேமராவில் மைக்ரோ போன் பொருத்தபட உள்ளது. ஒவ்வொரு என்ஜினிலும் 6 அதிநவீன கேமராக்கள் வைக்கப்பட உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களில், ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் காட்சிகள் தத்ரூபமாக பதிவாகும்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்த நிலையில், நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானார்கள். ஒரே நேரத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க ஏராளமானோருக்கு டிக்கெட் வழங்கியதால் இந்த சம்பவம் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய திட்டத்தை ரயில்வே கொண்டுவர உள்ளது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் புதுடெல்லியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, நீண்ட தூர ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

எடுத்துக்காட்டாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் கொல்லம், அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 4 பெட்டிகள் என மொத்தம் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது. ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் என மொத்தம் 1,800 டிக்கெட்டுகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வழங்கப்படும்.

முன்பதிவில்லாத பெட்டியில் 90 முதல் 100 பேர் வரை பயணிக்க இருக்கை வசதி உள்ளது. ஆனால், தினந்தோறும் ஒவ்வொரு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் 300 முதல் 350 பேர் மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் நெருக்கியவாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பயணிகள் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்த புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

இதுகுறித்து சாதக, பாதகங்களை பரிசீலனை செய்து நடைமுறைகள் வகுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர். சவுகரியமான பயணம், குறைவான கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வெளியூர் செல்வதற்கும் வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கும் ரயில்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory