» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

செவ்வாய் 15, ஜூலை 2025 5:50:16 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அவரது சொந்த ஊரான சென்னபட்டணா தசவாரா கிராமத்தில் அவரது தாயார் கல்லறை அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவரை தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்கள் 'கன்னடத்து பைங்கிளி' என அழைத்து வந்தனர். அதுபோல் கன்னடத்தில் அவருக்கு 'அபிநய சரஸ்வதி' என்ற பட்டமும் சூட்டப்பட்டது. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேசுவரத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் அவர் வழக்கம் போல் தனது வீட்டில் குளித்துவிட்டு பூஜைகளை செய்தார். பின்னர் அவர் டி.வி.யை 'ஆன்' செய்தபோது திடீரென மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவர் மரணம் அடைந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். அவருக்கு வயது 87.

சரோஜாதேவி மரணம் திரை உலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலுக்கு இந்திய திரை பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பெங்களூர் மல்லேசுவரம் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு திரை உலக பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள். ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான சென்னபட்டணா தாலுகா தசவாரா கிராமத்தில் ஒக்கலிகர் சமூக முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது. சரோஜாதேவி தனது தாயார் ருத்ரம்மாவின் கல்லறை அருகே தனக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும் என கூறி இருந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க தாயார் கல்லறை அருகில் அரசு மரியாதையுடன் சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory