» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எம்புரான் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1½ கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்!

ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:16:37 AM (IST)



எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிதி நிறுவன அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1½ கோடி, மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி உள்ள ‘எம்புரான்' திரைப்படத்தின் 4 தயாரிப்பாளர்களில் ஒருவரும், கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபருமான கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் கொச்சி மண்டலத்தை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் நிதி நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் நீலாங்கரையில் உள்ள கோபாலகிருஷ்ணன் வீடு ஆகியவை சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. விடிய, விடிய நடைபெற்ற இந்த சோதனை நேற்று பகலில் நிறைவடைந்தது. இந்த சோதனையில் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறையின் கொச்சி மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோகுலம் நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கி கடந்த 2015-ம் ஆண்டு வகுத்த விதிமுறைகளை மீறி உரிய அனுமதி இன்றி இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் நபர்களிடம் இருந்து சந்தா தொகை பெற்றிருக்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அன்னிய மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையில் கோகுலம் நிதி நிறுவனம் வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து ரூ.371.80 கோடி பணத்தை ரொக்கமாகவும், ரூ.220.74 கோடியை காசோலையாகவும் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சோதனையில் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோகுலம் நிதி நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது. அதனடிப்படையில் அப்போது இந்த நிறுவனம் தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory