» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விடுதலையான 9 பேருக்கு பிடிவாரண்ட்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

சனி 21, டிசம்பர் 2024 10:56:45 AM (IST)



டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விடுதலையான 9 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தவர் சுப்பையா. இவர் நரம்பியல் நிபுணர். இவர் கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதான 9 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. 

சுப்பையாவின் உறவினரான அரசுப்பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் முருகன், செல்வப்பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த 2021ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சுப்பையாவின் மனைவி சாந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தது ஏற்க முடியாதது. இதுபோன்ற தீர்ப்பை இதுவரை பார்த்ததில்லை. எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 4 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும்'' என நோட்டீஸ் பிறப்பித்து கடந்த மாதம் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதாவது விடுதலை செய்யப்பட்ட 9 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதோடு வரும் 20ம் தேதி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory