» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‍ கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு!

வெள்ளி 20, டிசம்பர் 2024 4:06:53 PM (IST)

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது. 

இதன்படி 3 சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, கடந்த 12-ந்தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த 17ம் தேதி மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. அப்போது, அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகள் அமளியால் அவையை அதன் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

ஒத்திவைக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்காக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் கூட்டுக்குழுவிற்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய கூச்சலுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கூட்டுக் குழுவிற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழுவில் 27 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பிபி சவுத்ரி மற்றும் காங்கிரசின் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory