» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடன் தொகையைத் தாண்டி ரூ.8ஆயிரம் கோடி வசூலிப்பு : விஜய் மல்லையா குற்றச்சாட்டு!

வியாழன் 19, டிசம்பர் 2024 3:46:58 PM (IST)

கடன் தொகையைத் தாண்டி என்னிடம் இருந்து ரூ.8ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. குறித்து இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா். இதனிடையே, அவர் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை துறை பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் மேற்கொண்ட நடவடிக்கைகளில் விஜய் மல்லையாவின் ரூ.14,131.16 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்பட மொத்தமாக ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து விஜய் மல்லையா வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: கிங் ஃபிஷர் ஏர்லைனின் மொத்த கடன் வட்டித் தொகை ரூ. 1,200 கோடியுடன் சேர்த்து ரூ. 6,203 கோடி என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமலாக்கத்துறையால் எனது சொத்துகள் ரூ. 14,131 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆனால் நான் இன்னும் பொருளாதாரக் குற்றவாளியாக உள்ளேன். எனது கடன் தொகையைவிட இரு மடங்குக்கு மேல் வசூலிக்கப்பட்டதை அமலாக்கத்துறையும் வங்கியும் நியாயப்படுத்தவில்லை என்றால் நிவாரணம் கேட்க எனக்கு உரிமை உண்டு.

கடன் தொகையைத் தாண்டி என்னிடம் இருந்து ரூ. 8,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. என்னை துஷ்பிரயோகம் செய்பவர்கள் உள்பட யாராவது முன்வந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவார்களா? இழிவுப்படுத்தப்பட்ட என்னை ஆதரிக்க தைரியம் தேவை.

சிபிஐ பதிவு செய்துள்ள குற்ற வழக்குகளுக்கு நான் பதிலளிக்க வேண்டும் என்றும் அரசும் என்னை விமர்சிப்பவர்களும் கூறுகிறார்கள். சிபிஐ என்ன வழக்கு பதிவு செய்தது? நான் யாரிடம் இருந்தும் ஒரு ரூபாய்கூட கடனாக பெறவில்லை, திருடவில்லை.

ஆனால், கிங்ஃபிஷர் கடனுக்கு உத்தரவாதம் அளித்தவர் என்ற முறையில் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் உள்பட ரூ.900 கோடி கடனை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு கடனும் வட்டியுடன் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது. 9 ஆண்டுகள் கடந்தும் மோசடி செய்ததற்கும், நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதற்கும் உறுதியான ஆதாரம் இல்லாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory