» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாரதியார் கண்ட தேசிய ஒருமைப்பாட்டை போற்றி கொண்டாடுவோம்: பவன் கல்யாண்
புதன் 11, டிசம்பர் 2024 5:09:56 PM (IST)
பாரதியார் கற்பனை செய்த தேசிய ஒருமைப்பாட்டை போற்றி கொண்டாடுவோம் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பாரதியாரை போற்றும் வகையில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; "புகழ்பெற்ற கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தொலைநோக்கு சிந்தனையாளரும், காலத்தால் அழியாத தனது எழுத்துகளால் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தியவருமான சுப்பிரமணிய பாரதியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்.
"சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம், கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்; சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்" என்ற பாரதியின் கவிதையை மேற்கொள் காட்டி இந்திய தேசிய ஒருமைப்பாட்டை நாம் போற்றி கொண்டாடுவோம் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.