» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்காவில் இருந்து வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ

புதன் 5, பிப்ரவரி 2025 11:35:58 AM (IST)



அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் வந்துகொண்டிருக்கும் விமானம் இன்று தரையிறங்கவுள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. எத்தனை பேரை அமெரிக்கா அனுப்பியது என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், 205 பேர் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத் துறை இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 100-க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அதில், 20-க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்துகொண்டிருக்கும் விமானத்தில் உள்ள 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்கும் நடவடிக்கையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விமானத்தில் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறங்கியவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல உதவியவர்கள் குறித்த தகவலை பெற விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் 13-ஆம் தேதி அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தாா். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமா் மோடி நல்ல முடிவை எடுப்பாா் என பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பின் கடந்த 27-ஆம் தேதி அவா் கூறினாா். சுமாா் 18,000 இந்தியா்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இந்தியா திரும்பும் முன் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இந்தியா்கள் என உறுதிசெய்யப்பட்டால் அவா்களைத் திருப்பி அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory