» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இனிமேல் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் : சரத் பவார் அறிவிப்பு

புதன் 6, நவம்பர் 2024 12:09:36 PM (IST)

"இனிமேல் நாடாளுமன்ற தேர்தல் அல்லது வேறு தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் " என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியான சரத் பவார்  மகாராட்டிர முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். இந்திய அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்து 1999இல் இவர் நிறுவிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். 

மேற்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாராமதி சரத்பவாரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகும். பாராமதி மக்கள் சரத்பவாரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அவரை எம்.பி., எம்.எல்.ஏ. என இந்த தொகுதியிலிருந்து 14 முறை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் பாராமதி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவாரை எதிர்த்து, அவரது தம்பி மகனும், சரத்பவாரின் பேரனுமான யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். தனது பேரன் யுகேந்திர பவாருக்கு ஆதரவாக சரத்பவார் நேற்று சுபா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "நான் எனது அரசியல் வாழ்க்கையில் 14 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன். உள்ளூர் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று முடிவு செய்து, அனைத்து பொறுப்புகளையும் அஜித்பவாரிடம் ஒப்படைத்தேன். கடந்த 25-30 ஆண்டுகளாக கட்சியின் அனைத்து பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. இப்போது புதிய தலைமைக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

இந்த முழுமையடையாத பணிகளை முடிக்க புதிய தலைமை தேவை. எனது மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது. அதன்பிறகு, மாநிலங்களவை எம்.பி.யாக வேண்டுமா என்பது குறித்து நான் முடிவு எடுக்கவேண்டும். இனிமேல் நான் நாடாளுமன்ற தேர்தல் அல்லது வேறு தேர்தல்களில் போட்டியிட மாட்டேன். ஆனால் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்" என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory