» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவதே நீதித்துறை சுதந்திரமா? தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்!
செவ்வாய் 5, நவம்பர் 2024 12:46:16 PM (IST)
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்று அர்த்தமில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது; "பொதுவாகவே, நீதித்துறையின் சுதந்திரம் என்பது நிர்வாகத்திற்கு கட்டுப்படாத சுதந்திரம் என வரையறுக்கப்பட்டது.
தற்போதும், நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதையே குறிக்கிறது. ஆனால் அது மட்டுமே நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படையில் அல்ல. நம் சமூகம் மாறிவிட்டது. குறிப்பாக சமூக ஊடகங்களின் வருகையால், மின்னணு ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் சில குழுக்கள் செயல்படுவதை காணமுடிகிறது.
இந்த குழுக்கள் நீதிபதிகள் தங்களுக்கு சாதகமாக முடிவெடுத்தால், அதை நீதித்துறையின் சுதந்திரம் என்று அழைக்கின்றன. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு நீதிபதிக்கு அவரது மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். நிச்சயமாக, அது சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் மனசாட்சியாக இருக்க வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்றோ, அல்லது அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்றோ அர்த்தமில்லை. அது சுதந்திரம் பற்றிய எனது வரையறை அல்ல." இவ்வாறு சந்திரசூட் தெரிவித்தார்.