» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரபல நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதி!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 11:05:04 AM (IST)
மும்பையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகரான கோவிந்தா 165-க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கோவிந்தா வெற்றி பெற்று 5 ஆண்டுகள் எம்பியாக பதவி வகித்தார். தற்போது சிவசேனை கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
மும்பையில் வசித்து வரும் நடிகர் கோவிந்தா, தனது வீட்டில் வைத்துருந்த துப்பாக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் எடுத்தபோது தவறுதலாக வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கோவிந்தாவின் காலில் இருந்து குண்டு அகற்றப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலத்துடன் அவர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கோவிந்தாவின் மேலாளர் கூறியதாவது: "கொல்கத்தாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 6 மணி விமானத்தில் செல்ல இருந்தோம். நான் முன்னதாக விமான நிலையத்துக்கு சென்றுவிட்டேன். கோவிந்தா வீட்டில் இருந்து புறப்படும்போது இந்த விபத்து நடந்துள்ளது. அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்ததில் வெடித்துள்ளது. நல்வாய்ப்பாக அவரது காலில் குண்டு பாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.