மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் பங்களிப்புடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஆக்ஸஸ் தனியார் வங்கி அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆதார் சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (13.10.2026) துவக்கி வைத்து தெரிவிக்கையில்-
இந்திய அலுவலக தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) இயக்கப்படும் ஆதார் சேவை மையங்கள் பாதுகாப்பான, தரநிலைப்படுத்தப்பட்ட மற்றும் உயர்தர ஆதார் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாடுமுழுவதும் செயல்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் புதிய நவீன வசதிகளுடன், விரைந்து சேவைகளை வழங்கும் வகையில் ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மையத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பொதுமக்களும் எளிதில் அணுகக்கூடிய, திறன்மிக்க மற்றும் மையப்படுத்தப்பட்ட சேவைகளை பெற முடியும்.
குறிப்பாக பிறந்த குழந்தைகள் மற்றும் இதுவரை ஆதார் பதிவு செய்யாத அனைத்துத் தரப்பு மக்களும் புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை திருத்தம் செய்தல், கைரேகை, கண் விழித்திரை மற்றும் புகைப்படம் ஆகியவற்றைச் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். இச்சேவைகளை நாம் பெற உரிய ஆவணங்களுடன் இம்மையத்திற்கு சென்று பதிவேற்றம் செய்து, விரைந்து ஆதார் அட்டை பெற முடியும்.
மேலும் இந்த ஆதார் சேவை மையம் அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர. வாரத்தின் ஏழு நாட்களிலும் செயல்படும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான எந்தநாளிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் எளிதில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், சக்கர நாற்காலி செல்லுவதற்கான சாய்வுதளம், கழிப்பறை வசதிகள் மற்றும் தனிப்பட்ட குறைதீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு ஆதார் சேவை மையத்தில் மேலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகள் மற்றும் கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவற்றிற்கு விரைவாகத் தீர்வு கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார். பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் துறை சேவைகளைப் தடையின்றிப் பெற ஆதார் அட்டை இன்றியமையாத ஆவணமாக உள்ளது.
வெட்டூர்ணிமடம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய மையத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது ஆதார் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். பொதுமக்கள் இந்த சேவையினை முழுமையாகப் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மூத்த கணக்கு அலுவலர் ரமேஷ் கடுகான் (பிராந்திய அலுவலகம், பெங்களூரு), திட்ட மேலாளர் விஜய் குமார் ஒய் (மண்டல அலுவலகம், பெங்களூரு), பிராந்திய மேலாளர் நரேஷ் தும்மா (BLS இன்டர்நேஷனல் சர்வீசஸ் லிமிடெட்), மைய மேலாளர் எஸ்.அய்யப்பன் (யுஐடிஏஐ), செயல்பாட்டு மேலாளர் தினேஷ் குமார், ராஜ்குமார், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

