குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் களஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னிட்டு இன்று (13.10.2026) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து களஆய்வு மேற்கொண்டார்.
குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா நடைபெறுவதையொட்டி காமராஜர் நகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமையவுள்ள இடங்கள், கருங்காளியம்மன் கோவில் சந்திப்பு, குலசை – உடன்குடி செல்லும் சாலை பகுதியில் வாகனம் நிறுத்துமிடம், தீச்சட்டி செலுத்தும் இடம், கட்டுப்பாட்டு மையம், சூரசம்ஹாரம் நடைபெறும் இடம், ஆரம்ப சுகாதார நிலையம், ஆகிய பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி கூடுதலாக ஏற்படுத்திட வேண்டும், மேலும், அனைத்து பகுதிகளிலும் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட வேண்டும், கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்திடவும், தற்காலிக பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடம் சிறப்பான முறையில் சீரமைத்திட வேண்டும். போக்குவரத்து இடையூறு இல்லாமல் அனைத்து சாலைகளையும் சீரமைத்திட வேண்டும்.
மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து சிறப்பான முறையில் தசரா திருவிழாவை கொண்டாடுவதற்கான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள சிவ நவநீத பெருமாள் மஹாலில் அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் தி.சு.ரோஜா லி சுமதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஷ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) க.மனோபார்கவி மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

