தூத்துக்குடி சங்கரப்பேரி, ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் வீரமூர்த்தி (71). ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவரது வீட்டின் கதவை கடந்த 27.09.2026 அன்று மர்ம நபர்கள் உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து வீரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார் மகன் மணிகண்டன் (30), திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த பொன்னன் மகன் பாலமுருகன் (29) மற்றும் புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த நல்லமுத்து மகள் சரண்யா (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மணிகண்டன், பாலமுருகன் மற்றும் சரண்யா ஆகிய 3 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த திருடப்பட்ட 14 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

