தூத்துக்குடியில் 17 வயது சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழும், இருதரப்புப் பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விவேகானந்தர் நகர் பகுதியில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி 17 வயது சிறுமி ஒருவருக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இத்தகவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாகத் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறைக்குத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறை அதிகாரி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டம்:
சமூக நலத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற்றோர் உட்பட இருதரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

