தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் பாரம்பரியமாக நடைமுறையில் இருந்த பள்ளியறை பூஜையைப் பொதுமக்கள் தரிசிக்க மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாநகர மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் : தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவிலில் தினமும் இரவு நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடாகும்.

இந்தத் தெய்வீகப் பூஜையைத் தரிசிப்பதற்காகவே இரவு நேரத்தில் ஏராளமான பக்தர்கள், இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றுச் செல்வது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஆன்மீக மரபாகும். பள்ளியறை பூஜை காண்பதால் திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்று ஆண்கள் மற்றும் பெண்கள் இரவு பள்ளியறை பூஜையைக் காண வருகிறார்கள்.

ஆனால், சமீபகாலமாகத் தனிப்பட்ட நபர்களின் செயலால், பக்தர்கள் அனைவரும் மனமுருகி கண்டு களித்து வந்த இப்பள்ளியறை பூஜையைப் பொதுமக்கள் பார்ப்பதற்கு நிர்வாகத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. பாரம்பரியமாக நடந்து வந்த இந்த ஆன்மீக வழிபாட்டைத் தரிசிக்க முடியாமல் சாமானிய பக்தர்கள் தற்போது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர். கோவில் நிர்வாக நடைமுறைகள் பக்தர்களின் வழிநாட்டு உரிமையைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதே ஒட்டுமொத்த ஆன்மீக அன்பர்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே, கோவில் நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு, நிர்வாகச் சிக்கல்களைச் சுமுகமாகத் தீர்த்து, பக்தர்கள் அனைவரும் எவ்விதத் தடையுமின்றி மீண்டும் பழையபடி பள்ளியறை பூஜையைக் கண்டு தரிசிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.