வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சியின் செயல்பாடுகளுக்குப் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், மாநகராட்சி ஆணையாளர் சி. பிரியங்கா உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் எஸ்.ஆர். கணேஷ் தலைமையில் பொது சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, முத்து நகர் கடற்கரை பூங்காவில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் புனித மரியன்னை கல்லூரி இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பதில் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாலை நடத்தின.

நிகழ்ச்சியில் தலைமையேற்றுப் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சி. பிரியங்கா, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் படி குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். வீடுகளில் சேரும் குப்பைகளைப் பொது இடங்கள், வடிகால்கள், காலி மனைகளில் வீசுவதால் மழைக்காலங்களில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு டெங்கு, மலேரியா போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் வீடுகள் மற்றும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேமித்து வைத்துள்ள குடிநீர்ப் பாத்திரங்களைச் சரியாக மூடி வைக்க வேண்டும் என்றும், மொட்டை மாடி மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கும் காரணிகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் புனித மரியன்னை கல்லூரி மாணவியர்கள் எழுதி இசையமைத்த விழிப்புணர்வு குறும் பாடலை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டார். துண்டுப் பிரசுரங்களுக்குப் பதிலாக கியூ.ஆர். கோடு முறையில் விழிப்புணர்வுச் செய்திகள் பகிரப்பட்டது இக்கோடைக்கால விழிப்புணர்வின் சிறப்பு அம்சமாக அமைந்தது.

தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் உதவிப் பேராசிரியர் புளூமன் ரெஜி ஏற்பாட்டில் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற பார்வையாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சுகாதார அலுவலர்கள் ராஜசேகரன், ராஜபாண்டியன், ஹரி கணேசன், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரையாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.