கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள லீபுரம் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் செல்வ ஆனந்த் (31). இவர் வட்டக்கோட்டை சந்திப்புப் பகுதியில் பழைய தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வங்கிகளில் இருந்து மீட்டு மறு விலைக்கு விற்கும் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 24-ஆம் தேதி மாலையில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திங்கட்கிழமை காலையில் வந்து கடையைப் பார்த்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 1.900 கிலோ எடை கொண்ட வெள்ளி நகைகளும், கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 6 ஆயிரமும் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து எஸ்.பி. அன்சுல் நாகர் உத்தரவுப்படி, கன்னியாகுமரி டி.எஸ்.பி. பி.பிரகாஷ் மேற்பார்வையில், அஞ்சுகிராமம் காவல் ஆய்வாளர் செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர் பிரியராஜ் குமார் மற்றும் காவலர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம் முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஐயப்பன் (22), திருநெல்வேலி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் சஞ்சய் (20) மற்றும் ஜெயபிரகாஷ் தெருவைச் சேர்ந்த ஜனகிராமன் மகன் ஐயப்பன் (22) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1 கிலோ வெள்ளி நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையர்களை 8 மணி நேரத்திற்குள் அதிரடியாகப் பிடித்த அஞ்சுகிராமம் ஆய்வாளர் செல்வி தலைமையிலான போலீசாரை மாவட்ட எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.