தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினசரி சுழற்சி முறையில் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாகக் கடலில் மணிக்கு 55 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், கடந்த 25-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 25-ஆம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தற்போது புயலின் தாக்கம் மற்றும் காற்றின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (அக்டோபர் 29) முதல் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத்துறை நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

இருப்பினும், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் விசைப்படகு தொழிலாளர்கள் நலச்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பில் இருந்து சில சங்கங்கள் வெளியேறுவதாக அறிவித்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தச் சங்கப் பிரச்சனை காரணமாக இன்று (29.10.2026) மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தைத் தொடர்ந்து தற்போது சங்கப் பிரச்சனையாலும் தொழில் முடங்கியுள்ளதால், இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.