தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து தென் கொரியாவில் மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால், HD Hyundai நிறுவனத் தலைவர் ஜொங் கி-சுனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வ வழிகள் துறை மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால், தென் கொரியா நாட்டின் சியோல் நகரில் HD Hyundai நிறுவனத் தலைவர் ஜொங் கி-சுனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா - தென் கொரியா இடையேயான கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் தொழில் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சரின் நான்கு நாள் தென் கொரியப் பயணத்தின் ஒரு பகுதியாக இச்சந்திப்பு நடைபெற்றது.

இத்திட்டத்தில் HD Hyundai நிறுவனத்தின் கப்பல் கட்டும் பிரிவான HD Korea Shipbuilding & Offshore Engineering (HD KSOE) முக்கிய முதலீட்டாளராகப் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கக் கூட்டுப் பணிக்குழு (JWG) மற்றும் கூட்டு நிறுவனம் (JV) அமைக்கப்படும்.

மத்திய அரசின் கப்பல் கட்டும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள இத்தளம், ஆண்டில் சுமார் 25 லட்சம் கிராஸ் டன்னேஜ் (GT) அளவிலான கப்பல்களைக் கட்டும் திறன் கொண்டதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ள இப்புதிய கப்பல் கட்டும் தளத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) அடுத்த ஆறு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும்.

இத்திளத்தின் மூலமாக இந்தியாவின் கப்பல் கட்டும் திறன் பன்மடங்கு அதிகரிப்பதோடு, உலகளாவிய கடல்சார் துறைசார் போட்டியில் இந்தியா பலத்த முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.