சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் கலையரசனைச் சட்டவிரோதமாகக் கைது செய்த தவெக அரசைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) உதவிப் பேராசிரியரும், தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினருமான முனைவர் கலையரசனைச் சீருடை அணியாத போலீசார் சட்டவிரோதமாகக் கைது செய்து அலைக்கழித்த சம்பவத்திற்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் கலையரசனைச் சீருடை அணியாத போலீசார் சட்டவிரோதமாகக் கைது செய்து வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ அல்ல; தமிழகத்தின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் கல்வியாளர்."
"குற்றவாளிகளை உலவ விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்துவது அசிங்கமானது. தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் சந்தித்துள்ள விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்துப் பேசியதற்காகவா இந்த நடவடிக்கை? முட்டாள்களால் நிறைந்த தவெக அரசு பாசிசத்தில் பாஜகவையும் மிஞ்சிவிட்டது."
"கலையரசன் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் மிரட்டும் ரவுடி அரசாகத் தவெக அரசு செயல்படுகிறது. இப்படிப்பட்ட அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன்?"
"புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து துன்புறுத்திய தவெக அரசுக்கு என் கடும் கண்டனம். தமிழக போலீசாரும், இதற்குப் பொறுப்பேற்று முதல்வரும் கலையரசனிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்."
கைதுக்கான பின்னணி:
பல்லாவரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. காமாட்சியைச் சமூக வலைதளத்தில் அவதூறாக விமர்சித்துப் பதிவிட்டதாகக் கூறிப் பேராசிரியர் கலையரசனை விசாரணைக்காகப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
விசாரணையின் போது, "தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி 'விஜயமணி' என்ற பெயரில் யாரோ உருவாக்கிய போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்தே அந்தப் பதிவு போடப்பட்டுள்ளது; அதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கலையரசன் விளக்கமளித்தார். இது குறித்து ஏற்கனவே டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, விளக்கக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு போலீசார் அவரை விடுவித்தனர்.

