தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்ட கோபுரம் பகுதியில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களைத் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பிரகாஷ் (24), திருநெல்வேலி சேரன்மகாதேவியை சேர்ந்த மாயாண்டி மகன் மாயகணபதி (24) மற்றும் தூத்துக்குடி குளத்தூரைச் சேர்ந்த சந்தனசேகர் மகன் முகிலரசன் (19) என்பது தெரியவந்தது.
இது தொடர்பாகத் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார். மேலும், அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 750 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரகாஷ் மற்றும் மாயகணபதி ஆகிய இருவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

