» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

த‌மிழக அரசியலில் மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

திங்கள் 3, பிப்ரவரி 2025 9:00:02 PM (IST)

2026 தேர்தலில் த‌மிழக அரசியலில் மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம் என்று  தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தொண்டர்களுக்கு விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நமது அரசியல் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம். நமது முதல் மாநில மாநாடான வெற்றி கொள்கை திருவிழாவானது.

அதில் தான், கட்சியின் ஐம்பெரும் கொள்கை தலைவர்களை, மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகளை, மாபெரும் செயல் திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம். எதற்கும் அஞ்சாமல், எதை கண்டும் பதறாமல் நம் கருத்திலும், கருத்தியலிலும் நின்று, நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்.

குடியுரிமை சட்ட திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை மக்கள் பிரச்சினைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலை தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியே தான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களை விட தனித்து உயர்ந்தது, மக்கள் அரசியல் மட்டுமே.

தொடரும் இந்த பயணத்தில் கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கம் செய்யும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான் நாம் தொண்டர்கள் தேர்ந்தெடுத்த மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமை அலுவலகத்திற்கு புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம்.

தமிழக வெற்றிக்கழகத்தின் ரத்த நாளங்களான தொண்டர்களை அரசியல் மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கென தனிபெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல்படி தான் வருகிற 2026 தேர்தல்.

கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் பொருட்டு தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்ட பணிகளை தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் பணி வாயிலாக மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரு வீடு விடாமல் தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் கட்சி கொடியை ஏற்றி வைக்க வேண்டியது தொண்டர்களின் ஒவ்வொருவரின் கடமை.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோர்த்து, நமது வலிமையை நாட்டுக்கு பறைசாற்றி, அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயக பெருநிகழ்வை தமிழகத்தில் உருவாக்கி காட்ட போகிறோம். இந்த அரசியல் பேரிலக்கை நோக்கி, நீங்கள் இப்போதே உழைக்க தொடங்க வேண்டும்.

மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாக தொடர்ந்து உழைத்தால் தான் தமிழக அரசியலின் கிழக்கு திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக்கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றி காட்ட வேண்டும்.

வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பது தான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி. 1967-ல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒரு பெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர் 1977-ல் மீண்டும் ஒரு அரசியல் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது, இந்த இரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும் தான்.

அத்தகைய ஓர் அரசியல் பெரு வெளிச்சத்தை கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகார பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கி காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனதளவில் அதற்கு தயாராகி வருகிறார்கள். தொண்டர்களே, தமிழக மண்ணை சேர்ந்த மகன் உங்களுடன் நிற்கிறேன். நாம், நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம். இரட்டைப்போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப்பூ மாலை சூடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

முட்டாள் சக்தி அவர்களேFeb 4, 2025 - 06:57:00 PM | Posted IP 162.1*****

கத்தோலிக்க மதத்துக்கும் மிஷனரிக்கும் என்ன சம்பந்தம் ? முட்டா பயலே

மக்கள் சக்திFeb 4, 2025 - 03:36:14 PM | Posted IP 172.7*****

இவன் மிஷனரி பெரிய பிராடு, இவனெல்லாம் ஆட்சியை பிடிப்பேன் என்று வந்துள்ளான், தமிழ்நாட்டில் சில முட்டாள்கள் இவனை போல கூத்தாடி பின்னால் போவதால்தான் இவன் இப்படி நினைக்கிறான்......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory