» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இடஒதுக்கீட்டை ரத்து செய்ய காங்கிரசின் ‘இளவரசர்’ சதி : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வியாழன் 14, நவம்பர் 2024 8:32:15 AM (IST)

பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய காங்கிரசின் ‘இளவரசர்’ சதி செய்வதாக ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் வருகிற 20-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி நேற்று ஜார்கண்டில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தியோகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், இடஒதுக்கீடு விவகாரத்தில் ராகுல் மற்றும் ராஜீவ் காந்தியை மறைமுகமாக சாடினார்.

தனது உரையில் அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்தான நோக்கங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி) சதி செய்கிறார்.

அந்த இளவரசரின் தந்தை இட ஒதுக்கீட்டை அடிமைத்தனம் மற்றும் கொத்தடிமைத் தொழிலாக அறிவித்தார். அதை நீக்க வேண்டும் என்று விளம்பரம் செய்தார். ஆனால் அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இதுபோன்ற எந்த சதியையும் முறியடிப்போம்.

ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு, ஊடுருவல்காரர்கள் நிரந்தர குடிமக்கள் ஆவதற்கு உதவி வருகிறது. இந்த ஆழமான வேரூன்றிய சதியால் மாநிலத்தின் அடையாளமே மாறிவிடும்.

ஊடுருவல் சம்பவங்கள் ஜார்கண்டுக்கு மிகப்பெரும் கவலையாக மாறி இருக்கிறது. இதன் மூலம் சந்தல் பர்கானாவில் பழங்குடி மக்கள் தொகை பாதியாக குறைந்துவிடும். இதே போக்கு நீடித்தால் மாநிலத்தின் அடையாளமே மாறிவிடும். தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை பலவீனப்படுத்தும் இதுபோன்ற எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்கமாட்டோம்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். அதன் பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்பேன். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டே கணக்கீடுகள், வரிசைமாற்றங்கள் மற்றும் சேர்க்கைகளை மேற்கொள்பவர்கள் இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளும் பெரும் கூட்டத்தைப் பார்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory