» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
விரைவில் ‘பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை’ : ராகுல்காந்தி அறிவிப்பு
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 12:12:00 PM (IST)
விரைவில் ‘பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை’ தொடங்கும் என்று வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மணிப்பூரில் இருந்து மும்பைவரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை (ஜோடோ யாத்ரா) நடத்தினார்.
இந்நிலையில், ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். கடந்த பாரத ஒற்றுமை நியாய யாத்திரையின்போது அவர் சிறுவர்களுடன் இணைந்து செய்த தற்காப்பு கலை பயிற்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
அவர்களிடம், தான் ஜப்பானிய தற்காப்பு கலையான அய்கிடோவில் ‘பிளாக் பெல்ட்’ வாங்கியவன் என்றும், ‘ஜியு-ஜிட்சு’ தற்காப்பு கலையில் ‘ப்ளு பெல்ட்’ வாங்கியவன் என்றும் ராகுல்காந்தி கூறுவது வீடியோவில் உள்ளது. தற்காப்பு கலையில் உள்ள தந்திரங்களை அவர் கற்றுக்கொடுத்தார்.
மேலும், ‘பாரத் ஜோடோ’ யாத்திரை போல், விரைவில் ‘பாரத் டோஜோ’ யாத்திரை தொடங்கும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். டோஜோ என்பது தற்காப்பு கலை பயிற்சி கூடம் அல்லது பள்ளியை குறிக்கும்.
அந்த பதிவில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது: பாரத ஒற்றுமை நியாய யாத்திரையின்போது, தினந்தோறும் மாலை நேரங்களில் தங்கியிருந்த இடங்களில் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டோம். யாத்திரையில் பங்கேற்றவர்களும், அந்தந்த ஊர் இளம் தற்காப்பு கலை பயிற்சியாளர்களும் அதில் பங்கேற்றனர்.
உடலை உறுதியாக வைத்துக்கொள்ள எளிதான வழிமுறையாக தொடங்கிய தற்காப்பு கலை பயிற்சி, விரைவிலேயே சமுதாய செயல்பாடாக மாறியது. அந்தந்த ஊர் இளம் பயிற்சியாளர்களும் சேர்ந்து கொண்டனர்.அந்த இளம் வயதினருக்கு தியானம், ஜியு-ஜிட்சு, அய்கிடோ ஆகியவை அடங்கிய கலையை அறிமுகப்படுத்துவதே எங்களது நோக்கமாக இருந்தது.
வன்முறையை மென்மையாக மாற்றுவதன் பெருமையையும், இரக்கமுள்ள, பாதுகாப்பான சமுதாயத்தை கட்டமைப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தோம். இந்த தேசிய விளையாட்டு தினத்தில், மக்களுடன் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களில் சிலர் இந்த பயிற்சியை மேற்கொள்ள உத்வேகம் பெறுவார்கள் என்று நம்புகிறேன். பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை விரைவில் தொடங்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.