» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை : உறுதி செய்தது உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 11, ஜனவரி 2024 11:39:29 AM (IST)
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று பிறப்பித்த உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து, வழக்கை நவ.30-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர், தடை விதித்தது செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேநேரம் வேண்டுமானால் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
ஜெ . தொண்டர்கள்Jan 13, 2024 - 03:28:17 PM | Posted IP 172.7*****