» சினிமா » செய்திகள்

பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார்: நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது

வியாழன் 19, செப்டம்பர் 2024 5:12:10 PM (IST)

பெண் நடனக் கலைஞர் அளித்த பாலியல் புகாரில் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநர், ஜானி மாஸ்டர். தனுஷின் ‘மாரி 2’ படத்தில் ‘ரவுடி பேபி’, ‘பட்டாஸ்’ படத்தின் ‘ஜில் ப்ரோ’, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ‘ஹலமிதி ஹபி போ’, ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக அவருக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

அவர் மீது, அவர் குழுவில் பணிபுரியும் 21 வயது உதவி பெண் நடனக் கலைஞர், ஹைதராபாத் ராய்துர்கம் போலீஸில் பாலியல் புகார் அளித்துள்ளார்.அதில் கடந்த 2017-ம் ஆண்டு முதன் முறையாக நிகழ்ச்சி ஒன்றில் ஜானி மாஸ்டரை சந்தித்ததாகவும், 2 ஆண்டுகள் கழித்து, தனக்கு உதவி நடன இயக்குநராக வேலை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த காலக்கட்டத்தில் படப்பிடிப்புக்காக சென்னை, மும்பை என சென்ற இடங்களிலும் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் வைத்தும் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். 18 வயது நிரம்பாத நிலையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவர் கூறியதை அடுத்து ஜானி மாஸ்டர் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தெலங்கானா காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவர் ஹைதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜானி மாஸ்டர் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் பவன் கல்யாணின் ‘ஜன சேனா’ கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory