» சினிமா » செய்திகள்

பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தடை: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு

வியாழன் 5, செப்டம்பர் 2024 8:37:29 PM (IST)



பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் சினிமாவில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரை உலகை, புரட்டிப்போட்டு உள்ளது. ஹேமா கமிஷன் அறிக்கைக்கு பின்னர் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். மலையாள நடிகர் சங்கமே ஒட்டு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் புகார்களால் மலையாளத் திரை உலகமே கலகலத்துப்போய் உள்ளது.

இதனிடையே தமிழ்த்திரை உலகிலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது என்று நடிகைகள் ஊர்வசி உள்ளிட்டோர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தமிழ்த்திரை உலகில் அவ்வாறான புகார்கள் இதுவரை வரவில்லை. அவ்வாறு வந்தால் அதுபற்றி விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற பரபரப்புகள் ஒருபுறம் இருக்க, விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, கடந்த 22.4.2019 அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் குழு (ஜெண்டர் சென்சேஷன் அண்ட் இண்டர்னல் கம்ப்ளயிண்ட் கமிட்டி) உருவாக்கப்பட்டது.

இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி, உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் 5 வருடம் சினிமாவில் பணியாற்ற தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவரம் வருமாறு: பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும். கமிட்டியில் ஒரு வழக்கறிஞரும் நியமிக்கப்படுவார்.

பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும். பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாலியல் தொல்லைக்குள்ளானவர்கள், தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ-மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேசவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு போலீசின் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory