» சினிமா » திரை விமர்சனம்
பறந்து போ: குழந்தைகளுடன் பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்!
சனி 5, ஜூலை 2025 10:21:28 AM (IST)

காதல் திருமணம் செய்துகொண்ட கோகுல் (சிவா), குளோரி (கிரேஸ் ஆண்டனி) ஆகியோரின் பத்து வயது மகன் அன்பு (மிதுன் ரியான்). பொருளாதாரத் தேடல்களில் இருக்கும் இருவரும் அன்புவைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் பிடிவாதம் கொண்ட அன்புவை அழைத்துக் கொண்டு, அன்றாடங்களில் இருந்து விடுபட்டு நீண்ட 'பைக் ரைடு'க்குச் செல்கிறார் கோகுல். அந்தப் பயணம்அவர்களுக்கு எதைப் புரிய வைக்கிறது? அங்கு சந்திக்கும் மனிதர்கள், என்ன மாற்றத்தை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறார்கள் என்பது கதை.
பொருளாதார தேடலுக்குப் பின்னால் பரபரத்து ஓடும் அவசர வாழ்க்கையில் குழந்தைகளின் உலகத்தையும் ஆசைகளையும் எளிதாக மறந்து விடுகிறார்கள், பெற்றோர்கள். அவர்களின் எதிர்காலத்துக்காக அதிக செலவு செய்து படிக்க வைத்தாலும் தேவைகளை காஸ்ட்லியாக செய்தாலும் குழந்தைகளின் மனது அதில் இல்லை. அவர்கள் தங்கள் இயல்பை, 'குழந்தைமை'யைத் தேடுகிறார்கள் என் பதை, நகைச்சுவையோடும் அக்கறையோடும் உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது படம்.
வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் ராம், அதில் அசத்தலான வெற்றியும் பெற்றிருக்கிறார். சிவா, குளோரி, அன்பு ஆகிய மூவரைச் சுற்றிய கதையில், அன்பு கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்க, அதைத் தொடர்ந்து அவர்கள் சந்திக்கிற சம்பவங்கள் மிகவும் இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பது படத்துக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. கதையோடு இணைந்த நகைச்சுவையும் திரைக்கதையின் வேகத்துக்கு உதவி இருக்கிறது.
கோகுலின் அப்பா (பாலாஜி சக்திவேல்), 'ஸ்கூல் க்ரஷ்' வனிதா (அஞ்சலி), அவர் கணவர் குமரன் (அஜு வர்கீஸ்), ‘டெக்ஸ்டைல் எக்ஸ்போ’வில் குளோரியிடம் வேலைபார்க்கும் அந்தப் பெண், கொட்டும் மழையில் ரோட்டோர மண்டபத்தில் தங்கும் ‘எம்பரர்’ என அனைத்து கதாபாத்திரங்களும் ‘பாசிட்டிவா’க இருப்பதும் அவர்களின் தேவையும் கதைக்கு வலுவூட்டுகின்றன.
இதுவரை பார்த்த சிவாதான் என்றாலும் இதில் 'நடிகராக' வளர்ந்திருக்கிறார். எமோஷனலான காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார். கிரேஸ் ஆண்டனி தனது காதல் கணவரையும் மகனின் செல்லச் சேட்டைகளையும் சகித்து கொள்கிற பொறுமையை, இயல்பாக வெளிப்படுத்துகிறார். காதல் திருமணம் செய்து கொண்டதால், 'சாத்தானோடு சேர்ந்தால் சேலைதான் விற்க முடியும்’ என்று சகோதரி திட்டிவிட்டுச் செல்லும் இடத்தில் கலங்க வைக்கிறார்.
மாஸ்டர் மிதுன் ரியான், ஒரு சிறுவனின் இயல்பை மிகையின்றி வெளிப்படுத்தி இருக்கிறார். ‘லையர்’ அப்பாவிடம் இருந்து தொலைந்து, அடிக்கடி மலையேறி விட்டு, ‘இறங்க தெரியல’ என்கிறபோது தியேட்டரில் சிரிப்பலை.
சந்தோஷ் தயாநிதியின் இசையில், மதன் கார்க்கி வரிகளில், துண்டு துண்டாக வரும் பாடல்கள் அதிகம் என்றாலும் கதையின் உணர்வுகளை இசையோடு இயல்பாகக் கடத்துகிறது. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்தின் வேகத்துக்கு உதவி இருக்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் மீண்டும் வருவதும், ‘பேரன்டிங்’ பற்றி கிளாஸ் எடுப்பது போல்வரும் வசனங்களும் கொஞ்சம் வேகத்தடை என்றாலும் ‘பறந்து போ’ சுகமான அனுபவத்துடன் நம்மை பறந்து போகவே வைக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனுஷ் - நாகார்ஜுனா நடித்துள்ள குபேரா திரைவிமர்சனம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:45:46 PM (IST)

மணிரத்னம் இயக்கத்தில் கமல் - சிம்பு நடித்துள்ள தக் லைஃப் விமர்சனம்!
வியாழன் 5, ஜூன் 2025 4:18:06 PM (IST)

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ விமர்சனம்!
வெள்ளி 2, மே 2025 4:24:27 PM (IST)

அஜித்தின் குட் பேட் அக்லி - திரை விமர்சனம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:13:44 PM (IST)

வைபவ் நடித்துள்ள பெருசு படத்தின் திரைவிமர்சனம்
திங்கள் 17, மார்ச் 2025 12:32:12 PM (IST)

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா விமர்சனம்!
சனி 16, நவம்பர் 2024 4:14:18 PM (IST)
