» சினிமா » திரை விமர்சனம்
அஜித்தின் குட் பேட் அக்லி - திரை விமர்சனம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:13:44 PM (IST)

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மும்பையின் மிகப்பெரிய கேங்ஸ்டரான ஏகே (அஜித்) தன் மகனுக்காக எல்லா தீய நட்புகளையும் அடிதடிகளையும் விட்டு இதுவரை செய்த குற்றத்திற்காக சிறைக்குச் செல்கிறார். அவர் சிறையிலிருப்பது தெரியாமலேயே வளரும் அவரது மகன் இக்கட்டில் சிக்கிக்கொள்ள அவரை மீட்க மீண்டும் பழைய ரெட் டிராகன் டானாக (don) அஜித் மாறுகிறார். இதற்குள் நடக்கும் சண்டைகளும், பழிவாங்கல்களும் இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதுதான் குட் பேட் அக்லியின் கதை. இதுவரை தமிழ் சினிமா பிழிந்துபோட்ட கதைதான். ஆனால், படம் எப்படி இருக்கிறது?
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை அஜித் ரசிகர்கள் நீண்ட காலம் மறக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகனாகவும் இயக்குநராகவும் குட் பேட் அக்லியை முழுக்க அஜித்தின் படமாகவே உருவாக்கியிருக்கிறார் ஆதிக். படத்தின் ஆரம்பக் காட்சிகளிலிருந்து இறுதிவரை அஜித் இல்லாத பிரேம்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அறிமுகக் காட்சியில் ரசிகர்களைக் கத்திக் கூச்சல் போட வைத்த ஆதிக், படம் முடிந்தபின் காட்டப்படும் படப்பிடிப்பு சம்பவங்கள் வரை விசில் சத்தங்களிலேயே வைக்கும் அளவிற்கு ரசிகர்களின் பாஷையில் சம்பவம் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அஜித்தின் வித்தியாசமான தோற்றங்கள், இதுவரை பார்க்காத ஆடை வடிவமைப்புகள், அஜித்தை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டார்களோ அப்படியான காட்சிகள் என விருந்து வைப்பதிலேயே முழுகவனத்தைச் செலுத்தியிருக்கிறார். லாஜிக் இல்லாத கதையாக இருந்தாலும் காட்சிகளைப் பரபரப்பாக நகர்த்தியது படத்தை பலப்படுத்துகிறது. ஆக்சன் காட்சிகளைத் திட்டமிட்ட விதமும் அதில் ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்தியதும் அதில் அஜித் ஈடுபாட்டைக் கொடுத்திருப்பது என உளவியல் ரீதியாகவே அஜித்தின் பழைய படங்களை நினைவுப்படுத்தி ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலையிலேயே வைத்திருப்பதில் ஆதிக் வெற்றி பெற்றிருக்கிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் மும்பை சிறைச்சாலையைக் காட்டுகின்றனர். ஆனால், அது செட் என அப்பட்டமாக தெரிவதால் படத்தின் மீதான நம்பகத்தன்மையை இழப்பது, அழுத்தமற்ற உணர்ச்சிகள் என முதல்பாதி கலவையான எண்ணங்களைக் கொடுத்தாலும் இரண்டாம்பாதி முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காகவே திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் நடக்கும் சண்டைக் காட்சிகள், ஏகே யார் என்கிற பிளாஷ்பேக் உள்ளிட்டவற்றை மாஸாகவும் நகைச்சுவையாகவும் கொண்டுசென்றது நன்றாக இருந்தது.
முதலிலேயே சொன்னதுபோல் இது முழுக்க முழுக்க அஜித்தின் படமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் இயக்குநர் கதை மற்றும் வசனத்தைப் பற்றி எந்தக் கவலையும் படவில்லை. இப்படியொரு கேங்ஸ்டரா? என நம்ப முடியாது. இப்படியெல்லாம் நடக்குமா என சொல்லமுடியாது. படத்தின் பலவீனம் லாஜிக் பிரச்னைகளாகவே இருக்கும். குறிப்பாக, ரெட்ரோ பாடல்களைக் குறைவாகப் பயன்படுத்தியிருகலாம் என்கிற எண்ணமும் வருகின்றன. சில காட்சிகளின் மேக்கிங் தரமும் இன்றைய ரசனைக்கு விலகியிருக்கிறது.
ஆனால், பழைய கதையாக இருந்தால் என்ன? நான் இருப்பது போதாதா? என நடிகர் அஜித் குமார் காட்சிக்கு காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். மங்காத்தாவுக்குப் பின் தன் ரசிகர்களுக்கு முழு திருப்தியை அஜித்தால் கொடுக்க முடிந்திருக்கிறது. இளவயது தோற்றத்திலிருந்து தற்போது தோற்றம் வரை கலக்கியிருக்கிறார்.
பழைய அஜித் குமாரை இனி பார்க்க முடியாது என ஏங்கிய அவரது ரசிகர்களிடம் ‘அது’ என அசரடிக்கிறார். அஜித்தின் சட்டைகள், கையிலிருக்கும் டாட்டூ, நகைச்சுவையான உடல்மொழி, ஆக்சன் பாவனைகள் என குறைகூற முடியாத அளவிற்குத் தன் முழு ஒத்துழைப்பையும் இயக்குநருக்கு வழங்கியிருக்கிறார். சில பழைய பாடல்களுக்கு நடனமும் ஆடுவது பார்க்க நன்றாக இருக்கிறது.
அஜித்துக்கு வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸுக்கு கைதிக்குப் பின் நல்ல படமாகவே அமைந்திருக்கிறது குட் பேட் அக்லி. தன் அறிமுகக் காட்சியிலிருந்து கிளைமேக்ஸ் வரை அர்ஜுன் தாஸ் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கான வில்லன் கதாபாத்திர வலு குறைவாக இருந்தாலும் அதிலும் தன்னால் சரியாக செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார். இப்படத்திற்குப் பின் அர்ஜுன் தாஸுக்கான ரசிகர்களும் அதிகரிப்பார்கள்.
எப்போதும்போல் த்ரிஷா கவர்கிறார். சில வசன உச்சரிப்புகள் சரியாக இல்லை. ஆனால், தன் கதாபாத்திரத்திற்கு ஒரு முழுமையை அவரால் கொடுக்க முடிகிறது. அதேபோல், நடிகர்கள் ஜாக்கி ஷெரஃப், பிரபு, சுனில், பிரசன்னா, அஜித்துக்கு மகனாக நடித்தவர் என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களைச் சரியாகக் கையாண்டுள்ளனர்.
படத்தில் அஜித் நாயகனாக இருந்தாலும் அந்தப் பிம்பத்தை இறுதிவரை குறையாமல் பார்த்துக் கொண்டது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்தான். ஜிவியின் பின்னணி இசை பிளேஷ் பேக் காட்சிகளுக்கு பெரிய பலத்தை அளிக்கின்றன. ஆனால், அதிக சப்தம். அதைக் கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜனின் ஒளிப்பதிவு மற்றும் வண்ணமயமாக்கல் (colour grading) நல்ல முயற்சியாகவே இருக்கின்றன. ஆடை வடிவமைப்பாளர் அனு வரதனுக்கு கூடுதல் பாராட்டுக்கள்.
அஜித்தை இப்படியொரு படத்தில் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன என ரசிகர்கள் நினைத்தால் குட் பேட் அக்லியை திரையரங்கில் காணலாம். குடும்பத்துடன் பார்க்கும் படமாகவே உருவாகியிருக்கிறது. என்னதான், கேங்ஸ்டர் சண்டைப்படமாக இருந்தாலும் சிகரெட், மதுகோப்பைகளை அஜித் ஒருகாட்சியில்கூட தொடவில்லை.
இப்படி, ரசிகர்களுக்கான படத்தைக் கொடுத்தாலும் அதில் தனக்கான எல்லையையும் கடைபிடித்திருக்கிறார் ஏகே. அஜித் திரைவாழ்வில் அமர்க்களமான கமர்ஷியல் பட பட்டியலில் ‘குட் பேட் அக்லி’க்கு நல்ல இடமுண்டு. ஒரு ஃபேன் பாயாக (fan boy) ஆதிக் அஜித் ரசிகர்களை ஏமாற்றவில்லை!
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைபவ் நடித்துள்ள பெருசு படத்தின் திரைவிமர்சனம்
திங்கள் 17, மார்ச் 2025 12:32:12 PM (IST)

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா விமர்சனம்!
சனி 16, நவம்பர் 2024 4:14:18 PM (IST)

கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் திரை விமர்சனம்
செவ்வாய் 5, நவம்பர் 2024 7:51:37 PM (IST)

ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் விமர்சனம்
ஞாயிறு 3, நவம்பர் 2024 10:33:11 AM (IST)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் விமர்சனம்
வெள்ளி 1, நவம்பர் 2024 5:53:56 PM (IST)

ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரை விமர்சனம்!
வெள்ளி 11, அக்டோபர் 2024 11:16:43 AM (IST)
