» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வில்லியம்சன், ரவீந்திரா சதம்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து!
வியாழன் 6, மார்ச் 2025 10:57:46 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபி 2வது அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்தியாவுடன் மோதும் அணியை தேர்ந்தெடுப்பதற்கான 2வது அரை இறுதிப் போட்டி பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று, நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே நடந்தது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் வில் யங் 21 ரன்னில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து தென் ஆப்ரிக்க வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன் வேட்டை ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 154 பந்துகளில் 164 ரன்களை குவித்தது.
அணியின் ஸ்கோர் 212 ஆக இருந்தபோது, ஒரு சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் விளாசி இருந்த ரவீந்திரா, ரபாடா பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வில்லியம்சனும் சதம் விளாசிய சிறிது நேரத்தில் வெளி யேறினார். 94 பந்துகளை சந்தித்து 1 சிக்சர் 10 பவுண்டரிகளுடன் 102 ரன்களை அவர் வெளுத்திருந்தார்.
பின் டேரில் மிட்செல் 49, டாம் லாதம் 4, மைக்கேல் பிரேஸ்வெல் 16 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன் குவித்திருந்தது. கிளென் பிலிப்ஸ் 27 பந்துகளில் 49 ரன், மிட்செல் சான்ட்னர் 2 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். தென் ஆப்ரிக்காவின் லுங்கி நிகிடி 3, காகிஸோ ரபாடா 2, வியான் முல்டர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதையடுத்து, 363 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ரையான் ரிக்கெல்டன் 17 ரன்னில் வீழ்ந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் கேப்டன் டெம்பா பவுமா, ராஸி வான்டர் தூசனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தபோது பவுமா, 56 ரன்னில் அவுட்டானார். பின், 69 ரன்னில் வான்டர் தூசன் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து ஹென்ரிச் கிளாசன் 7 பந்துளில் 3 எடுத்து அவுட்டாகி மோசமான சூழலை உருவாக்கினார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக சதம் அடித்து களத்தில் நின்றார். 50 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 312 ரன்களை எடுத்து 50 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. நியூசிலாந்து பந்து வீச்சில் மிட்சல் சான்ட்னர் 3 விக்கெட், பிலிப்ஸ், மேட் ஹென்ட்ரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்காவை வென்ற நியூசி அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’!
திங்கள் 10, மார்ச் 2025 9:02:16 AM (IST)

வருண் சக்ரவர்த்தி அச்சுறுத்தலாக இருப்பார்: நியூஸிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்
வெள்ளி 7, மார்ச் 2025 5:06:56 PM (IST)

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு!
வியாழன் 6, மார்ச் 2025 12:49:20 PM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
புதன் 5, மார்ச் 2025 8:39:22 AM (IST)

உலக செஸ் தரவரிசை பட்டியல் 3ம் இடம் பிடித்து குகேஷ் அசத்தல்: ஜூனியர் பிரிவில் முதலிடம்!
திங்கள் 3, மார்ச் 2025 12:37:08 PM (IST)

வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அபாரம்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
திங்கள் 3, மார்ச் 2025 12:22:56 PM (IST)
