» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

புதன் 5, மார்ச் 2025 8:39:22 AM (IST)



சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று பகல்-இரவு போட்டியாக நடைபெற்றது. முதலாவது அரை இறுதியில் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. 

இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 4 சுழற்பந்து வீச்சாளர்கள் நீடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு பதிலாக கூபர் கனோலி, தன்வீர் சங்கா சேர்க்கப்பட்டனர். மும்பையைச் சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவால்கரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை கட்டியிருந்தனர்.

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி டிராவிஸ் ஹெட்டும், கனோலியும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். தடுமாற்றத்துடன் ஆடிய இவர்கள் 3-வது ஓவரில் பிரிந்தனர். 9 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காத கனோலி, வேகப்பந்து வீச்சாளர் ஷமியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடிபட்டார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்டீவன் சுமித் இறங்கினார்.

முதல் 11 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்த ஹெட் அதன் பிறகு தடாலடியாக மட்டையை சுழற்றினார். பாண்ட்யா, ஷமியின் ஓவர்களில் பவுண்டரிகள் ஓடின. இதையடுத்து பந்து வீச வந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அவரது விக்கெட்டை சாய்த்தார். அவர் வீசிய பந்தை ஹெட் (39 ரன், 33 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்த போது அதை ஓடிவந்து சுப்மன் கில் கேட்ச் செய்தார்.

இதன் பின்னர் மார்னஸ் லபுஸ்சேன், சுமித்துடன் இணைந்தார். இவர்கள் நிதானமாக ஆடியதால் ஸ்கோர் சீரான வேகத்தில் நகர்ந்தது. 19.5 ஓவர்களில் அந்த அணி 100-ஐ தொட்டது. அணியின் ஸ்கோர் 110 ரன்களை எட்டிய போது, லபுஸ்ேசன் (29 ரன்) ஜடேஜாவின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்துவந்த ஜோஷ் இங்லிசும் (11 ரன்) அவரது பந்துக்கே இரையானார்.

இதைத் தொடர்ந்து நுழைந்த அலெக்ஸ் கேரி, வந்த உடனே துரிதமாக ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினார். சுழற்பந்து வீச்சில் சில பவுண்டரிகள், சிக்சர் விரட்டினார். கேரி- சுமித் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணியின் ஸ்கோர் 300-ஐ நெருங்கலாம் என்பதே கணிப்பாக இருந்தது. ஆனால் இந்த கூட்டணிக்கு முக்கியமான கட்டத்தில் ஷமி ‘செக்’ வைத்தார். அவர் புல்டாசாக வீசிய பந்தில் சுமித் (73 ரன், 96 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிளீன் போல்டானார். அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் (7 ரன்) நிலைக்கவில்லை. 

அடுத்தடுத்து இரு முன்னணி வீரர்கள் வெளியேறியதால் ஆஸ்திரேலியாவின் ரன்வேகம் வெகுவாக குறைந்தது. அலெக்ஸ் கேரியும், பின்வரிசை பேட்ஸ்மேன்களின் ஒத்துழைப்புடன் கடைசி வரை ஆட்டத்தை கொண்டு செல்லும் முனைப்புடன் ஆடினர். இதனால் ஸ்கோர் பெரிய அளவில் உயரவில்லை. அலெக்ஸ் கேரி 61 ரன்களில் (57 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

பின்னர் 265 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. சுப்மன் கில் 8 ரன்னில் துவார்ஷூயிசின் பந்து வீச்சில் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா 13 மற்றும் 14 ரன்னில் எளிதான கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய ரோகித் சர்மா (28 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கனோலியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ஸ்ரேயாஸ் ஐயரும் கூட்டணி அமைத்து இந்திய அணியை சிக்கலில் இருந்து படிப்படியாக மீட்டனர். ஆஸ்திரேலியாவின் சுழல், வேகத்தாக்குதலை அவசரப்படாமல் எதிர்கொண்ட இவர்கள் ஏதுவான பந்துகளை மட்டும் துரத்தியடித்தனர். 19.4 ஓவர்களில் நமது அணி 100 ரன்களை கடந்தது. வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்ட இந்த கூட்டணி ஸ்கோர் 134 ஆக (26.2 ஓவர்) உயர்ந்த போது உடைந்தது. 

ஸ்ரேயாஸ் (45 ரன், 62 பந்து, 3 பவுண்டரி) ஆடம் ஜம்பாவின் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த அக்‌ஷர் பட்டேல் தனது பங்குக்கு 27 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் நிலைத்து நின்று நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி 84 ரன்னில் (98 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 40 ரன் தேவைப்பட்டது. அவர் பெவிலியன் திரும்பியதும் ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாகமடைந்தனர். துல்லியமான பந்து வீச்சு, அதற்கு ஏற்ப பீல்டிங் வியூகத்துடன் அவர்கள் கடும் குடைச்சல் கொடுத்தனர். 

இதனால் ஒன்று, இரண்டு ரன் எடுப்பதற்கே பெரும் பாடாக இருந்தது. 6-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து எதிரணியின் இறுதிக்கட்ட யுக்தியை அருமையாக சமாளித்தனர். 47-வது ஓவரில் ஜம்பாவின் பந்து வீச்சில் பாண்ட்யா இரு மெகா சிக்சர் பறக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அதன் பிறகே நெருக்கடியான சூழல் விலகியது. அடுத்த ஓவரில் பாண்ட்யா (28 ரன், 24 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். 

தொடர்ந்து ராகுல் சிக்சர் விளாசி இன்னிங்சை தித்திப்பாக முடித்து வைத்தார். இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ராகுல் 42 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஜடேஜா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திேரலியாவிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிசுற்றை எட்டுவது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 2000, 2002, 2013, 2017-ம் ஆண்டுகளிலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி வருகிற 9-ந்தேதி இதே மைதானத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து ஆகிய அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளும்.

விராட் கோலி சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் இந்திய அணி டாசில் தோற்றது. ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 14-வது முறையாக டாசை இழந்துள்ளது. இதில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் 11 முறையும், லோகேஷ் ராகுலின் கேப்டன்ஷிப்பில் 3 முறையும் டாசில் தோற்று இருக்கிறது.

இன்னிங்சின் 9-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் (39 ரன்) ஆட்டமிழந்தார். ஒரு நாள் போட்டியில் முதல் 10 ஓவருக்குள் சுழற்பந்து வீச்சில் ஹெட் விக்கெட்டை பறிகொடுத்தது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி 2 கேட்ச் செய்தார். இதையும் சேர்த்து அவரது கேட்ச் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக கேட்ச் செய்த பீல்டர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கை (160 கேட்ச்) பின்னுக்கு தள்ளினார். இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே (218 கேட்ச்) முதலிடத்தில் உள்ளார்.

இந்த ஆட்டத்தில் கோலி 84 ரன்கள் குவித்தார். ஐ.சி.சி. 50 ஓவர் போட்டிகளில் விராட் கோலி 50 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 24-வது முறையாகும். இந்த வகையில் அதிக முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்திருந்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (23 முறை) கோலி முறியடித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory